Showing posts with label cricket. Show all posts
Showing posts with label cricket. Show all posts

Wednesday, March 25, 2015

உலகக்கோப்பை கிரிக்கெட் - தென்னாபிரிக்காவின் துரதிட்டம்

இது வரை நடந்த உலகக்கோப்பை-2015 ஆட்டங்கள் அனைத்தையும் மிஞ்சும் வகையில், நேற்று நடந்த தென்னாபிரிக்கா-நியூஜிலாந்து அரை இறுதி ஆட்டம் அமைந்தது. இரு அணிகளும் அபாரமாக ஆடின. தெ.ஆ அணிக்கு அழுத்தமான சூழல்களில் சொதப்புபவர்கள் (Chokers) என்ற பட்டம் பல காலமாக இருந்து வருவது தெரிந்தது தான். ஆனால், அவர்கள் முதலில் பேட் செய்தபோது மன உறுதியுடன் நம்பிக்கையாக விளையாடினர் என்று கூறுவேன். 10 ஓவர்களுக்குள் 2 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில், டுபிளஸ்ஸியும், ரசௌவும் நிதானமாகவே ஆடினர். 100 ஓட்டங்களை எட்ட 24.1 ஓவர்கள் ஆயின. ஆதாம் மில்னேக்கு ஏற்பட்ட காயத்தால் அவருக்கு பதிலாக பந்து வீசிய இளைஞர் மாட் ஹென்றி அற்புதமாக பந்து வீசி தனது முதல் 5 ஓவர்களில் 9 ரன்களே கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

டிவிலியர்ஸ் களமிறங்கிய பின் தெ.ஆ அவசர/அதிரடி கதிக்கு மாறியது. வில்லியம்சன் 23வது ஓவரில் ஒரு ரன் அவுட்டையும், அடுத்த ஓவரில் ஒரு காட்ச்சையும் சொதப்பியதில், டிவிலியர்ஸ் 2 முறை தப்பிப் பிழைத்தார். தெ,ஆ 38 ஓவர்களில் 216/3 (டிவிலியர்ஸ் 60, டுபிளஸ்ஸி 82) என்ற மிக வலுவான நிலையில் இருந்தபோது, 1992-லும், 2003-லும் சதி செய்த மழை மீண்டும் தன் வேலையைக் காட்டியதில், ஆட்டம், 43 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. இருந்தும் மிச்சமிருந்த அந்த 5 ஓவர்களில், மில்லரின் மகா அதிரடியில் (49 ரன்கள், 18 பந்துகளில்) தெ.ஆ 65 ஓட்டங்கள் எடுத்தது. டக்வொர்த்-லூயி கணக்குப்படி, நியூஜியின் இலக்கு 43 ஓவர்களில் 298 (பிரதி ஓவருக்கு கிட்டத்தட்ட 7 ரன்கள்) என்று நிர்ணயிக்கப்பட்டு, ஒரு அருமையான “துரத்தலுக்கு” அடித்தளம் அமைக்கப்பட்டது.

நியூஜி பேட்டிங்: மெக்கல்லம் ஆட்டம் இலக்கு பொறுத்து அமையும் ஒன்றல்ல. இலக்கு 100,200.300 என்று எதுவாக இருந்தாலும், ஐபில் டி20 என்றாலும் உலகக்கோப்பை ஒரு நாள் ஆட்டம் என்றாலும், அதிரடி தான் அவர் பாணி. ரஜினி ஸ்டைலில் சொல்வதானால், மெக்கல்லம் வழி தனிவழி :-) 5 ஓவர்களில் நியூஜி 71 ஓட்டங்களை குவித்தது. அதில் மெக்கல்லம் எடுத்தது 59 (26 பந்துகள்). உலகத்தின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயினை ஒரு கிளப் பந்து வீச்சாளர் போல மெக்கல்லம் குரூரமாக எதிர்கொண்டதில் , 5வது ஓவரில் மட்டும் 25 ஓட்டங்கள்!


என் டிவிட்டு ஒன்று:

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  9h 9 hours ago

Thats what you call stand and deliver. .... Brendon's sixer against the 1 and only Steyn #NZvsSA

அந்நாள் முக்குச்சிக்காரனும், இந்நாள் தாக்கடி மட்டையாளுமான மெக்கல்லம் வெறி கொண்ட வேங்கையாக இருந்த காலையில் (சரி மாலையில்), வெளிவிலகுச்சுழல் வீசும் தென்னாப்பிரிக்கா பந்தாள் இம்ரான் தஹீர் 6வது வீச்சலகை ஒரு வெற்றலகாக  வீசியது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும் (இந்த வரி மட்டும் கவிஞர் மகுடேஸ்வரன் எழுதிய https://www.facebook.com/photo.php?fbid=863785130326644&set=a.278177815554048.60630.100000854949412&type=1 கட்டுரை தந்த உத்வேகத்தில் எழுதப்பட்டது)

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  9h 9 hours ago

Now SA can make a match of this contest as Mccullum has departed. Styne should be 1 relieved man #NZvsSA #worldcupcricket

மெக்கல்லம் 6வது ஓவரில் ஆட்டமிழந்தவுடன் தான், ஆட்டம் ஒரு சமநிலைக்கு வந்தது என்று கூறலாம். அவர் இன்னும் ஒரு 10 ஓவர்கள் களத்தில் இருந்திருந்தால், இந்த ஆட்டத்தை ”நகம் கடிக்க” வைத்த ஒன்றாக நாம் எல்லாம் சோசியல் மீடியாவில் சிலாகித்திருக்க மாட்டோம் என்று உறுதியாக கூறுவேன்.  வில்லியம்ஸும், குப்தில்லும், சோபிக்கவில்லை. டெய்லரும், எலியட்டும் கவனமாக, சற்று நிதானமாக ஆடினாலும், முதல் 5-ஓவர் மெக்கல்ல அதிரடியால், 22 ஓவர்கள் வரை (டெய்லர் விக்கெட்டிழப்பு) தேவையான ரன்ரேட் 7-ஐத் தாண்டவில்லை. நியூஜி 151/4.  முக்கியமான தருணங்களில் தாக்குதலில் இறங்காமல், மெத்தனமாக, ஒரு சுகம் தரும் வட்டத்தில் (comfort zone) தென்னாபிரிக்கா இயங்குவது கூட அதன் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் எனலாம். One must attack when the opponent seems to be a bit down.

நீயூஜி பாதிக்கிணறு தாண்டிய நிலையில் ஆண்டர்சன் களமிறங்கினார். இந்த இடத்தில், ஆண்டர்சனையும், எலியட்டையும் பாராட்ட வேண்டும், அழுத்தம் எதுவும் காட்டாமல், அமைதியாக ஓட்டங்களை எடுத்தனர். 32வது ஓவரில், தெ,ஆ-வின் தலைசிறந்த ஃபீல்டர் டிவிலியர்ஸ் ஒரு எளிமையான ரன் அவுட் வாய்ப்பை நழுவ விட்டார். நம்பவே முடியாத தருணம் அது. அது அழுத்ததினால் நிகழ்ந்ததாகத் தான் அப்போது தோன்றியது.

என் டிவிட்டுகள்:

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU 

The very Devil took over DeVilliers in that moment of choking madness. He had time to pull a stump out after the crucial miss #NZvSA

anbudan BALA|எஅ.பாலா retweeted
prempanicker @prempanicker  

The batsman wasn’t in the frame, AB!! You could have gathered, bounced the ball a couple of times and still had time!!


anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU 

.@ksnagarajan Choking just seen in brilliant DeVilliers missing the simplest of runouts #NZvSA #worldcupcricket

32வது ஓவர் முடிவில் ரன்ரேட் 8-ஐத் தாண்டினாலும், 6 விக்கெட்டுகள் கையிருப்பில் (11 ஓவர்களில் 90 ரன்கள் தேவை), நியூஜி கை சற்றே ஓங்கி இருந்ததாகத் தான் தோன்றியது. நடுவில் டிவிலியர்ஸ் ஒரு 8 ரன் ஓவர் வீசினார். மார்க்கல் வீசிய 38வது ஓவர் ஒரு மிக அற்புதமான ஓவர். ஒரு ரன் தான் கொடுத்தார். ஆண்டர்சன் விக்கெட்டை வீழ்த்தினார். மிக அதிக உயரம் சென்ற பந்து விழும் இடத்தை அருமையாக மதிப்பிட்டு காட்ச் பிடித்த டிபிளஸ்ஸியையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஓவர் முடிவில், ரன்ரேட் முதல் முறையாக 9-ஐத் தாண்டியது.

என் டிவீட்டுகள்:

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

60:40 in SA favour now #NZvSA

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

29 from 18. When most #ipl teams can win from here, why cant the Black Caps :-) #NZvSA

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

I am not supporting anyone here. Destiny will take its course in thrillers. Ony upto a point effort works. #NZvSA #worldcupcricket

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

This is LIVE WIRE #NZvSA

41வது ஓவரில், ரோன்ச்சி அவுட். தனது 5 உலகக்கோப்பையில் பங்கு கொள்ளும் 36-வயது டேனியல் வெட்டோரி களமிறங்கினார்.  மீண்டும் ஒரு ரன் அவுட் சொதப்பல், எலியட்டுக்கு ”உயிர்” கிடைத்தது. ஓவர் முடிவில், தேவையான ரன்ரேட் 11.50.  42வது மார்க்கல் ஓவரில், பெஹர்தீனும், டூமினியும் மோதிக்கொண்டதில் காட்ச் வாய்ப்பு பறிபோய் எலியட்டுக்கு மீண்டும் ஒரு “உயிர்” கிடைத்தது!  இவற்றை வைத்து, தென்னாபிரிக்க அணியை Chokers என்றழைப்பது சற்றே அதீதம் என்பேன். துரதிட்டமிக்க ஒரு அணியாகத் தான் தென்னாபிரிக்காவை நான் பார்க்கிறேன். இறுதி ஸ்டெயின் (43வது) ஓவரில் 12 ரன்கள் தேவையான சூழலில், 5வது பந்தில் எலியட் ஒரு பிரம்மாண்ட சிக்ஸர் அடித்து, மீதம் வரலாறு ஆனது. 2015 உலகக்கோப்பை போட்டியின் சிறந்த அணியாக பலரும் கருதும் நியூஜிலாந்து முதன்முறையாக உலகக்கோப்பை ஒரு நாள் போட்டி இறுதிச்சுற்றில் நுழைந்தது.


நியூஜியின் மகத்தான வெற்றிக்குப் பின் நான் இட்ட சில டிவீட்டுகள்:


anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

One feels so sorry for SA. Such a talented bunch of cricketers, tend to falter near the last mile #NZvSA

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

NZ NZ NZ NZ NZ NZ NZ NZ NZ NZ NZ NZ #NZvSA

 anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

.@priyakathiravan Steyn for all his proven skills & greatness delivered much less in crunch situations. He doesn't inspire confidence #facts

 anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

Though I acted neutral today, I was secretly wishing for a famous SA win as in some ways SA cricket reflects my life #NZvSA #worldcupcricket

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  5h 5 hours ago

When Morne was shedding tears, I really felt depressed. #NZvSA That lanky kid bowled his heart out today and that was not enough


முகத்தில் வலியைத் தேக்கிய டிவிலியர்ஸின் இப்புகைப்படம், தென்னாபிரிக்காவினரின் சோகத்தின் வெளிப்பாடாகவும்,

ஸ்டீபன் ஃப்ளெமிங்கின் இந்த டிவிட்டர் குறிப்பு, நியூஜிலாந்து நாட்டினரின் பெருமகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் காண முடிகிறது. 

Stephen Fleming, the Back Caps' former captain, was ecstatic.

“What an unbelievable game. So proud of the Back Caps and what they have achieved. Also feel the raw pain of South Africa on an amazing day,” read his post on the social networking site.

இறுதியாக ஒரு விஷயம்: நாளை நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா அரைஇறுதியில் இந்தியா டாஸில் வென்றால், சிட்னி ஆடுகளத்தை நோக்குகையில்,  ஃபீல்டிங் செய்வது உத்தமம் என்று படுகிறது. ஏனெனில், முதலில் ஆடி, 300+ ரன்கள் அடித்தால் கூட அது போதுமா என்று தெரியவில்லை.

---எ.அ.பாலா

Friday, November 28, 2014

Phillip Hughes - அசாதாரணத் திறமை -- அஞ்சலி


Phillip Hughes - அசாதாரணத் திறமை -- அஞ்சலி

ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் பலப்பல ஆண்டுகள் தொடக்க ஆட்டக்காரராக பரிமளித்திருக்க வேண்டிய பிலிப் அகாலமாக, ஒரு அசாதாரணமான நிகழ்வில் மரணம் அடைந்தது மிகவும் வருந்தத்தக்கது. ஒரு விவசாயின் மகனாகப் பிறந்து, தனது குடும்பத்தின் வாழைத்தோட்டத்தில் கிரிக்கெட் ஆடத் தொடங்கி, தனது அசாத்தியத் திறமையினால், 20 வயதிலேயே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கியவர், ஸ்டெயின், மார்க்கல், சோத்சோபே, நிதினி ஆகியோர் அடங்கிய தென்னாப்பிரிக்காவின் சூப்பர் வேகப் பந்துவீச்சை திறம்பட ஆடி, தனது முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் 75 ஓட்டங்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவின் மகத்தான வெற்றிக்கு வழி வகுத்தவர்.

2வது டெஸ்ட்டில், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான டர்பன் ஆடுகளத்தில், 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்து, உலக சாதனை நிகழ்த்தியவர். இதன் மூலம் ஜார்ஜ் ஹெட்லியின் 79 ஆண்டு சாதனை வீழ்ந்தது. சற்று நிதானமாக ஆடுபவர் என்ற முத்திரையை உடைத்து, வெலிங்டன் டெஸ்ட் ஒன்றில், 75 பந்துகளில் 86 ரன்களை விளாசி, ஒரு முக்கியமான வெற்றிக்கு காரணமானவர். அதற்கு நேர் மாறாக, 2011 கொழும்பில், இலங்கைக்கு எதிராக மட்டை போட்டு, சதமடித்து, டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்து, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வெல்ல வித்திட்டவர். ஒரு நாள் போட்டிகளிலும் 2 சதங்கள் அடித்துள்ளார். கிராமப்புறத்துக்கு உரித்தான தன்னடக்கமும், அமைதியும், தன்னம்பிக்கையும் மிக்க இளைஞரும் கூட.

இன்னும் எவ்வளவோ சாதித்திருக்க வேண்டிய, "Never say die" என்ற ஆஸ்திரேலிய சித்தாந்தத்திற்கு எடுத்துக்காட்டாக கிரிக்கெட் ஆடிய, ஒரு இளைஞர் 26 வயது நிரம்புவதற்குள் மரித்து விட்டார். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.

-- எ.அ.பாலா

Saturday, November 22, 2014

ரோஹித் சர்மா 264 - அசாதாரணத் திறமை

 30 நவம்பர் 2014 கல்கி வார இதழில் வெளிவந்த எனது கட்டுரை:

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் ரோஹித் சர்மா எடுத்துள்ள 264 ரன்கள் அபார சாதனை.  ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தபோதிலும், இலங்கை அணியின் பந்து வீச்சும், தடுப்பும் மோசமாக இருந்தும், 173 பந்துகளில் அவர் எடுத்த 264 ஒரு ஸ்பெஷல் இன்னிங்க்ஸ்.

 விரல் எலும்பு முறிவு காரணமாக முதல் 3 போட்டிகளில் ஆடாமல், 4வது போட்டியில் களமிறங்கியபோது, ரோஹித் தொடக்கத்தில் நிதானமாகவே ஆடினார், அதாவது முதல் சதமெடுக்க 100 பந்துகள் ஆனது. அதன் பின் தான் பிரம்மாண்ட விளாசல்!

ரோஹித் எதிர்கொண்ட அடுத்த 73 பந்துகளில் அவர் 164 ரன்கள் குவித்தார்! ஸ்டிரைக் ரேட் 225%. அந்த 164 ரன்களில் 21 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் (132 ரன்கள்) அடங்கும். அதோடு, அதிரடி ஆட்டத்தில் திறமை மிக்க விராத் கோலியுடனான 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில், ரோஹித் எடுத்தது 132 ரன்கள், கோலி எடுத்தது அதில் சரிபாதி 66 தான். இதிலிருந்தே அது ஓர் அசாதாரணமான, அபாரமான, அரிதான ஒரு நாள் இன்னிங்க்ஸ் என்பது விளங்கும்.

பிப் 2006-ல், தனது 19வது வயதில், ரோஹித் தனது சீனியர் கிரிக்கெட் பயணத்தை, மேற்கு மண்டல அணியின் சார்பில் தியோதர் போட்டி ஆட்டமொன்றில், தொடங்கியபோதே, அபரிமிதமான திறமை கொண்டவராக பலராலும் சிலாகிக்கப்பட்டவர். அதே ஆட்டம் தான் செத்தேஷ்வர் புஜாராவுக்கும் ரவிந்திர ஜடேஜாவுக்கும் கூட முதல் ஆட்டம் என்பது கூடுதல் தகவல். ரோஹித்தும் ஜடேஜாவும் மேற்கு மண்டல வெற்றிக்கு வழிவகுத்தனர்.

அடுத்த ஆண்டிலேயே, இந்திய ஒரு நாள் போட்டிக்கான கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்து விட்டாலும், அத்தனை திறமை இருந்தும், சர்வதேச அளவில் ரோஹித் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள 6 ஆண்டுகள் ஆனது. இடையே, T-20 உலகக்கோப்பையை (2007) இந்தியா வெல்ல, தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக ஆடினார். 2011-ல் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ரோஹித் இடம் பெறவில்லை.

அசாத்திய திறமைக்குத் தக்கவாறு பரிமளிக்க இயலாத, சற்றே அயற்சியான, அந்த காலகட்டத்தில், ஐபிஎல் T-20 மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் குறிப்பிடத்தக்க சிலபல இன்னிங்ஸ்களை ரோஹித் ஆடியிருக்கிறார்.  அவரது தலைமையில் 2013-ல் மும்பை அணி ஐபிஎல் T-20 கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

அவரது ஆதிரடி ஆட்டம் கூட, பேட்டிங் இலக்கணத்திலிருந்து அதிகம் விலகாமல், விவிஎஸ்.லஷ்மண் ஆட்டத்திற்கு இணையான, கண்ணுக்கு விருந்தாக அமையும் தன்மை கொண்டதாகவே தொடர்ந்தது. அசுர பலத்தை விடவும், கிரிக்கெட் ஆட்டத்திற்கு மிக முக்கியமான டைமிங் என்ற சங்கதியும், மைதானத்தில் இடைவெளிகளில் பந்தைச் செலுத்தும் லாவகமும், பந்தை எதிர்கொள்ள அவருக்குக் கிட்டும் ஒரு அரை வினாடி அதிக நேரமும் ரோஹித்துக்கு இயற்கையாகவே வாய்க்கப் பெற்றவை. ஆடுகளத்தைச் சுற்றி எல்லாத் திசைகளிலும் நேர்த்தியாக ஷாட்கள் ஆடக்கூடிய திறனும் ரோஹித்துக்கு பெரிய பலம். அதோடு, ரெய்னா, ஜடேஜாவுக்கு இணையான சிறந்த பந்து தடுப்பாளரும் கூட.

டெஸ்ட் போட்டியில் அசாருதீனுக்கு மாற்றாக விவிஎஸ்.லஷ்மண் பரிமளித்தது போல, விவிஎஸ்ஸின் இடத்திற்கு மாற்றுத் தேர்வாகவே ரோஹித் கருதப்பட்டார். ஆனால், அவருக்கு முன்னமே, ரெய்னா, புஜாரா, விராத் ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியில் நுழைந்து விட்டனர். ஒரு வழியாக, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான நவம்பர் 2013 டெஸ்ட் தொடரில் களமிறங்கி, தனது முதல் மற்றும் அடுத்த ஆட்டங்களில் தொடர் சதங்கள் அடித்தும், பின் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டங்களில் ரோஹித் சறுக்கலைச் சந்தித்தார்.

ஜனவரி 2013-ல், ஒரு நாள் போட்டிகளில், துவக்க ஆட்டக்காரராக ரோஹித் ஆட ஆரம்பித்த பின் தான் அவரது  திறமையின் முழு வீச்சைக் காணும் வாய்ப்பு நமக்கு ஏற்பட்டது.

2013 ஜனவரியிலிருந்து, சமீபத்தில் இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் குவித்து ஓர் உலக சாதனையை நிகழ்த்திய போட்டி வரை, ரோஹித் ஆடிய 38 போட்டிகளில், 3 சதங்கள், 11 அரைச்சதங்கள் என்று ரன்களை (சராசரி 53) குவித்ததைப் பார்க்கையில் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை போட்டியில், இந்தியா கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே தோன்றுகிறது!

மேலே குறிப்பிட்ட ரோஹித்தின் 3 சதங்களில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பங்களூரில் அடித்த மற்றொரு இரட்டைச்சதமும் (209) உண்டு. ஆக, ஒரு நாள் (50 ஓவர்) சர்வதேசப் போட்டிகளில், 2 இரட்டைச்சதங்கள் அடித்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் ரோஹித்துக்குச் சேர்கிறது.  இருப்பினும் இன்றைய T-20 உலகத்தில் இச்சாதனையை மிஞ்சுவது கடினம் என்று கூற இயலவில்லை! ஒரு நாள் போட்டியில் ஒருவர் 300 ரன்கள் எடுக்கும் வாய்ப்பு இருப்பதாகவேத் தோன்றுகிறது.  அதுவரை ரோஹித் தான் சூப்பர் ஹீரோ.

”அன்புடன்”
பாலா

நன்றி: கல்கி

Thursday, July 24, 2014

லார்ட்ஸ் டெஸ்ட் -இங்கிலாந்தின் சொ.செ.சூ இந்தியாவின் ஏற்றம்

இக்கட்டுரை இட்லிவடையிலும் பதிப்பிக்கப்பட்டது
28 நீண்ட வருடங்களுக்குப் பின், தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் இவ்வெற்றி, மிகவும் பாராட்டுக்குரியது என்பது அனைவரும் சொல்லும் ஒன்று தான். மிக முக்கியமாக, ஒரு இளம் இந்திய அணியின் முயற்சியால் கிடைத்த வெற்றி என்பதை நினைவு கொள்ள வேண்டும். டிராவிட், சச்சின், லஷ்மண், கங்குலி, சகீர் கான் என்ற ஜாம்பவான்கள் யாரும் இன்றி பெற்ற மகத்தான வெற்றி. 2011-ல் (இந்தியா மோசமாக தோற்ற) லார்ட்ஸ் போட்டியில் பங்கு பெற்ற அணியிலிருந்து தோனி, இஷாந்த் மட்டுமே இப்போது அணியில் உள்ளனர்.

ஏன் சொ.செ.சூ என்றால், இந்த 2வது டெஸ்ட்டில் இங்கிலாந்து தனக்குச் சாதகமான “பச்சை”க்களத்தை தயார் செய்தது, ஆண்டர்சனும், ப்ராடும் (Broad சற்று Fraud-ம் தான்), இந்தியாவை ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்ற நம்பிக்கையில்! டாஸிலும் வென்று, இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. எதிர்பார்த்தபடி இந்தியாவும் 145-7 என்ற நிலையில் தடுமாறிக்கொண்டிருந்தபோது, ரஹானே (103), புவனேஷ்வர், ஷாமி, இஷாந்த் துணை கொண்டு, வழி நடத்தி, இந்திய ஸ்கோரை இரண்டு மடங்கு ஆக்கியதில், இந்தியா எடுத்த மொத்தம் 295. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் சொற்ப ரன்கள் அதிகம் எடுத்தும், இந்தியா 2-வது இன்னிங்ஸில் எடுத்த 342 ரன்களும், இஷாந்த்தின் அபார பந்து வீச்சும், இங்கிலாந்தின் எதிர்ப்பை முறியடித்தன.

களமும், ஸ்விங்கும் இருந்த விதத்தை வைத்துப் பார்க்கையில் இங்கிலாந்து முதலில் பேட் செய்திருந்தால், 150-ஐ தாண்டியிருக்காது என்று கூறுவேன். ரஹானேயின் முதல் இன்னிங்ஸ் சதம் அத்தகைய சிறப்பு வாய்ந்தது. இங்கிலாந்துக்கு தோதான ஒரு ஆடுகளத்தில், இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர், ஷாமி, இஷாந்த் இங்கிலாந்தின் 20 விக்கெட்டுகளில் 15-ஐ கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதுவும் 2வது இன்னிங்க்ஸில் வெள்ளைக்காரர்கள் நமக்கெதிராக பொதுவாக பயன்படுத்தும் பவுன்சர் ஆயுதத்தை (தோனியின் பலத்த அறிவுரையின் பேரில்) இஷாந்த் அவர்களுக்கு எதிராக பயன்படுத்தி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது அசாதாரணம் என்பதோடு, மனவியல் ரீதியான ஒரு வெற்றியும் கூட!

இந்த லார்ட்ஸ் வெற்றிக்கு (தலைவர் தோனி தவிர்த்து) முக்கியக் காரணமாக குறிப்பிடவேண்டியவர்களாக, ரஹானே, முரளிவிஜய் (வித்தியாசமாக, இவர் பொறுமையின் உச்சமாக காட்சியளித்தது மன நிறைவைத் தந்தது), 2-வது இன்னிங்ஸில் 235/7 என்ற நிலையிலிருந்து இந்தியா 342 அடைய காரணமாக இருந்த ஜடேஜா மற்றும் வெறிபிடித்த வேங்கையாய் இங்கிலாந்தை வேட்டையாடிய இஷாந்த் ஆகியோர் இருந்தாலும், தனது ஆட்டத்தில் பரிமளித்தது மட்டுமன்றி (முதல் இன்னிங்ஸ் 6 விக்கெட்டுகள், 36 முக்கிய ரன்கள், 2-வது இன்னிங்க்ஸ் 52 மிக மிக முக்கிய ரன்கள்) “நம்மால் முடியும் அண்ணா” என்று சக வீரர்களுக்கு ஊக்கமும் அளித்த புவனேஷ்வர் குமார் தான் லார்ட்ஸின் கதாநாயகன் என்பது என் கருத்து.

1986-ஆம் ஆண்டு லார்ட்ஸ் வெற்றிக்கும் இந்த வெற்றிக்கும் சில சுவாரசியமான ஒற்றுமைகள் உள்ளன!

1. அப்போதும், இப்போதும் இந்தியாவின் கேப்டன்கள் உலகக்கோப்பையை ஏற்கனவே வென்றவர்கள் - கபில்தேவ், தோனி
2. அப்போதும், இப்போதும் தனது கடைசி இந்தியத்தொடரை வென்ற, ஓர் இடதுகை ஆட்டக்காரர் இங்கிலாந்தின் கேப்டன் - டேவிட் காவர், அலிஸ்டர் குக்
3. அப்போது ரோஜர் பின்னி, இந்த அணியில் அவர் மகன் ஸ்டூவர்ட் பின்னி
4. அப்போதும், இப்போதும் ஒரு துவக்க ஆட்டக்காரர், சென்னை மண்ணின் மைந்தன் - ஸ்ரீகாந்த், முரளிவிஜய்
5. அப்போதும், இப்போதும் ஒரு மும்பை வீரர் சதமடித்தார்! - வெங்க்சார்க்கர், ரஹானே
6. அப்போதும் ஷர்மா, இப்போதும் ஒரு ஷர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர் - சேத்தன் ஷர்மா, இஷாந்த் ஷர்மா :-)
7. அப்போது ரவி சாஸ்திரியும், இப்போது ஜடேஜாவும் அணியில் ஆல்ரவுண்டராக
8. இறுதியாக, 1986 மற்றும் 2014 இந்த இரண்டு ஆண்டுகளும் repeating வகை, அதாவது, இவ்விரு ஆண்டுகளின் கேலண்டர்களில் எந்த வித்தியாசமும் இருக்காது.

தலைமைச்சுமையால், மிகச்சிறந்த ஆட்டக்காரரான குக் சொதப்புவது பார்க்க பரிதாபமாக உள்ளது. அவர் கேப்டனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு ஆட்டக்காரராக அவரை இழப்பது இங்கிலாந்துக்கு பேரிழப்பாகவே அமையும். இந்தியாவைப் பொருத்தவரை, இன்னும் 3 டெஸ்ட் ஆட்டங்கள் இருப்பதால், தோனி அணியில் ஒரு complacency வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்த டெஸ்ட் போட்டிகளுக்கும் இங்கிலாந்து க்ரீன் டாப் களங்களையே தேர்வு செய்யும், அவர்களுக்கு வேறு வழி கிடையாது. அதனால், இந்த 2 டெஸ்ட்களில் அத்தனை சிறப்பாக ஆடாத ஷிகர் தவானும், விராத் கோலியும் பொறுமையாக ஆடி ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்ப்பது மிக அவசியம். அனைவரும் டெஸ்ட் தொடரை இந்தியா இன்னும் வென்றுவிடவில்லை என்பதை தெளிவாக நினைவில் இருத்துதல் அவசியமாகிறது.

---எ.அ.பாலா

Thursday, October 17, 2013

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் சச்சின் டெண்டுல்கர் ?!?!



ஓய்வு என்ற முடிவெடுத்த பின், 2 டெஸ்ட் போட்டிகள் எதற்கு என்ற எண்ணம் என் மனதிலும் எழுந்தது. 200 டெஸ்ட்கள் என்ற இலக்குக்கு வேண்டி சச்சின் ஆடுகிறார் என்பது தெளிவு! இது, சச்சின் ரெகார்டுகளுக்கு ஆடுபவர் என்று கூறுபவர்களின் வாதத்திற்கு வலிமை சேர்ப்பதாகவே உள்ளது.  உலகின் தலை சிறந்த மட்டையாளரான பிராட்மேன் 99.94 என்று அவரது டெஸ்ட் சராசரி இருந்த நிலையில், ஓய்வு பெறவில்லையா ? சச்சின் ஏன் இதை யோசிக்கவில்லை?

இது ஒரு புறமிருக்க, ஒரு 2 ஆண்டுகள் முன்னமே அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று சிலபலர் கூறுவதிலும் அர்த்தம் இருப்பதாகவே தோன்றுகிறது.  சச்சின் தனது கடைசி 25 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில், ஒரு சதம் கூட அடிக்கவில்லை, 4 ஐம்பதுகள், சராசரி 30.04, அதாவது அவரது மொத்த சராசரியை (53.86) விட 24 ரன்கள் குறைவு! இதை, மும்பையைச் சேர்ந்த மற்றொரு ஜாம்பவானின் புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இன்னும் தெளிவு கிடைக்கும்.  கவாஸ்கர், தனது கடைசி இன்னிங்க்ஸில், பந்து நர்த்தனமாடிய ஒரு square turning பங்களூர் ஆடுகளத்தில், பாகிஸ்தானின் மிகச் சிறந்த 3 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகத் திறமையாக விளையாடி 96 ரன்கள் எடுத்தார். இந்தியா தோற்றது என்பது வேறு விஷயம்!  கடைசி 25 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில், கவாஸ்கர் எடுத்தது, 4 சதங்களும், 6 ஐம்பதுகளும், சராசரி 58 ரன்கள் !!!

கிரிக்கெட் மேதையான சச்சின், ஏன் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக, தன்னை இவ்வாறு வதைத்துக் கொள்ள வேண்டும் !?  அவர் லெவலுக்கு, வயதுக்கு எதிரான அந்த ஜீவமரண போராட்டம் பார்க்க சகிக்காமல் இருந்தது. கிரிக்கெட்டின் மேல் கொண்ட காதல் தான் காரணம் என்று நினைக்கிறேன்.  தனது ஃபார்ம் திரும்பி விடும் என்ற அவரது எதிர்பார்ப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்! ஆனால், இளமை திரும்புவதில்லை என்பதை சற்று மறந்து விட்டார்.  28 வயதில் சுலபமாக கை கூடியவைகளை 38-ல் கை கூட வைக்க சச்சினால் கூட இயலாது என்பது தான் யதார்த்தம்.  Sachin should have gone in a blaze of glory for the ultimate cricket genius  he is, but sadly that did not happen.  அவரது கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்தாலும், கடைசி 2 ஆண்டுகளில், சாமானிய பந்து வீச்சாளர்களிடமெல்லாம் போராடிய சச்சினின் இமேஜ் மனத்திரையில் விலக மறுக்கிறது. 

சமகாலத்தில் விளையாடிய (சச்சினுக்கு நிகரானவர் என்று சொல்லத்தக்க!) லாராவின் (கடைசி 25 இன்னிங்க்ஸ்கள்) புள்ளி விவரங்கள் பிரமிக்க வைப்பதாக உள்ளது. அவரது சராசரி 45 ரன்கள் என்பதை விட, தனது கடைசி வருடத்தில் லாரா, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா என்ற பலமான அணிகளுக்குக் எதிராக, 2 சதங்களும், 2 இரட்டைச்சதங்களும் எடுத்தார்.  அதாவது, ஓய்வு பெறும் வரையில், லாராவின் ஒளிக்கீற்று பிரகாசமாகவே எரிந்தது! சச்சின் போன்ற ஒரு மேதை, கலைஞர் என்ற நிலையிலிருந்து கணக்காளராக மாறி விட்டது, அவரது பரம் விசிறிகளுக்கு சற்று வருத்தமான விஷயமே. விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டைலில் ஆரம்பித்தவர், இப்படி பாய்காட் போல சர்வைவலுக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டது அதை விட வருத்தமான விஷயமே!

கபில்தேவும் ஹாட்லியின் பந்து வீச்சு ரெகார்ட்டை முறியடிக்க, பரிதாபமாக மூச்சிரைக்க பந்து வீசிய அந்த கடைசி டெஸ்ட்கள் ஞாபகத்திற்கு வருகிறது. முரளிதரன் அந்த ரெகார்டை கபளீகரம் பண்ணி விட்டு, இலக்கை எங்கோ எடுத்துச் சென்று விட்டார் என்பது வேறு விஷயம்!  இப்போது, சச்சின் தனது விருப்பப்படி (இந்திய மண்ணில்) ஓய்வு பெறுவதற்காக, தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் சுருக்கப்பட்டு விட்டது. இதற்கு முன்னால், யாருக்காகவும் இப்படி நடந்ததாக ஞாபகமில்லை! வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டெஸ்ட் தொடரை விட (வலிமையான அணிக்கு எதிரான) தென்னாப்பிரிக்கத் தொடர் மிக மிக முக்கியமானது.  சச்சின் ஓய்வு பெற்றிருந்தால், இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரே நடைபெற்று இருக்காது என்பது தான் யதார்த்தம்.  மும்பையில் தான் ஓய்வு என்று சிறுபிள்ளை போல ஏன் இந்த பிடிவாதம் என்றும் புரியவில்லை!?

- எ.அ.பாலா

பிகு: 24 வருடங்களாக, நான் சச்சினின் பரம விசிறி. அவரது 90% ஆட்டங்களை நேரில் அல்லது டிவியில் ரசித்து வந்திருக்கிறேன்.

Friday, May 25, 2012

IPL5 -CSK vs MI -மும்பை F-16ஐ சுட்டு வீழ்த்திய தோனி”காப்டர்”

IPL5 -CSK vs MI -மும்பை F-16ஐ சுட்டு வீழ்த்திய தோனி”காப்டர்” 

சென்னை அணி, நேற்று பங்களூரில் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை அணியை ஜெயித்தது என்று சொல்லுவதை விட நசுக்கியது (அ) தரையிலிட்டு தேய்த்தது என்று சொல்வது பொருத்தமானதாக இருக்கும்! இதற்கு ஒரு காரணம், சென்னையின் Big match அனுபவமும் (3 ஐபிஎல்இறுதி ஆட்டங்கள், 1 செமிஃபைனல்) கூட! சென்னை அணி 4வது இடத்துக்கு ஓசியில் வந்தது என்று சொல்லுபவர்களுக்கு: பங்களூரும், ராஜஸ்தானும் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதற்கு, சென்னை என்ன பண்ணும்? அது போல, தர்மசாலாவில் நடந்த தில்லி-பஞ்சாப் ஆட்டத்தில், தில்லியின் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக பஞ்சாபின் வெற்றிக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி என்பது உலகறிந்த விஷயம் தானே! மேலும், சென்னை ஒரு 17 பாயிண்டுகள் எடுத்து, அதோடு முக்கியமாக +VE NRR-ஐ வைத்திருந்ததால் தானே, பிளே ஆஃப்-இல் நுழைய முடிந்தது!

நேற்றைய ஆட்டத்தில், தோனியின் ஆட்டம் அட்டகாசம்! அவரது பரபரப்பின்மையே முக்கியமான சமயங்களில் அவரது பலம் என்பதை அவர் மீண்டும் நிருபீத்தார்! அதுவும் அந்த ஹெலிகாப்டர் ஷாட்டை, (அதுவும் மலிங்காவின் பந்து வீச்சில்) shot of the day, ஏன், shot of IPL-5 என்று தாராளமாகக் கூறலாம்! அந்த ஓவரில், மலிங்கா 2 பந்துகளை chuck பண்ணினார் என்பது கூடுதல் தகவல்! அவர் 4 ஓவர்களில் 41 ரன்களை தாரை வார்த்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது! தனது இன்னிங்க்ஸில், சங்கர் படத்துக்கு இணையான பிரும்மாண்டம் கொண்ட 112 மீ சிக்ஸர் ஒன்றும் தோனி அடித்தார்.

தோனியின் 20 பந்துகள் 51 ரன்களும், பிரேவோவின் 14 பந்துகள் 33 ரன்களுமே, சென்னையின் மெகா ஸ்கோருக்கு (187) வழிவகுத்தன! அது போல, 1 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து மதிமயங்கி இருந்த சென்னையின் துயரகற்றி உய்ய வைத்த பெருமைக்குரியவர்கள், பத்ரியும், ஹஸ்ஸியும் ஆவர் :-) சென்னை முதல் 9 ஓவர்களில் எடுத்தது 47 ரன்கள் மட்டுமே! அடுத்த 4 ஓவர்களில் எடுத்ததும், 47 ரன்கள்!! தலைவர் தோனி, அண்ணல் பிரேவோ காஸ்மிக் நடனத்தின் முடிவில், அதாவது கடைசி 7 ஓவர்களில் சென்னை எடுத்தது, 93 ரன்கள்!

அதே நேரம், நல்ல திறமையிருந்தும், தொடர்ந்து சொதப்பும், முரளி விஜயையும், ரைனாவையும் பார்த்து மகா எரிச்சலாக இருந்தது! பிரேவோ, பந்து வீச்சிலும் நேற்று மிளிர்ந்தார். 3-0-10-2. அதுவும், போலார்ட் அவுட்டானவுடன், பிளேன் பிடித்து உடனே ஊருக்குச் செல்லுமாறு பிரேவோ அறிவுரை வழங்கி, அவருக்கு “பை பை” சொன்னது கண் கொள்ளா காட்சி ;-) ஹில்ஃபன்ஹாஸ் பந்து வீச்சு ரொம்ப disappointing! இந்திய ஆடுகளங்களில் அவர் ஷார்ட்டாக பந்து வீசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்! Some of his deliveries were standing up, begging to be hit !!! ஹில்ஃபன்ஹாஸ் அடுத்த ஆட்டத்தில், தனது அனுபவத்தையும்,  திறமையையும் முழுவதுமாக நீரூபிப்பார் என்று நம்புகிறேன்!

டுபிளஸ்ஸிக்கு பதில் ஹஸ்ஸியை அணியில் தக்க வைத்துக் கொண்டது நல்ல விஷயமே! சென்னை1-2 என்ற நிலையில் இருந்தபோது, அவரது அனுபவம் மிக்க பயனுள்ளதாக அமைந்தது! இதை hind sight-ல் தான் கூறுகிறேன் என்றாலும், அது தான் உண்மை!!!! இதற்கு தோனியை பாராட்ட வேண்டும்! அஷ்வின் எதிர்பார்த்தது போல சிறப்பாக பந்து வீசினார். ஆனால், அவரை விட பவர் பிளே ஓவர்களில் தைரியமாக, மிகத் திறமையாக பந்து வீசிய ஜகதியை எத்தனை பாராட்டினாலும் தகும்! அதுவும், ஹில்ஃபன்ஹாஸ் பந்து வீச்சு ஸ்மித்தால் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கடினமான சூழலில்!

என்னைப் பொருத்தவரை, அவரது ஆல்ரவுண்ட் பெர்ஃபார்மன்ஸுக்காக, பிரேவோவுக்குத் தான் (தோனிக்கு தரப்பட்ட) ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும்! எனது முந்தைய (இட்லிவடை வலைப்பதிவில் இட்ட) ஐபிஎல் இடுகையில், சென்னை ஆடுகளத்தை சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் உதவாத வகையில் சற்றே சீர் செய்ய வேண்டும் என்று கூறியதை சற்று மாற்றிச் சொல்கிறேன்! நாளைக்கு சுழற்பந்து வீச்சுக்கு ஏதுவாகவும், ஞாயிறன்று, சற்றே பசுமையான ஆடுகளமாகவும் அமைத்தல் அவசியம் :-)

என்னடா, மும்பை பேட்டிங் பற்றி எதுவுமே எழுதவில்லை என்று நினைப்பவர்களுக்கு: அந்த உதவாக்கரைகள் பேட்டிங் குறித்து எழுத ஒரு எழவும் இல்லை! அச்சுபிச்சு போல இருக்கும் அம்பானியின் திருமகன் ஒரு பெரிய சோபாவில் தனியாக அமர்ந்திருந்ததை டிவியில் காட்டினார்கள்! மும்பை எப்போதும் போல முக்கியமான ஆட்டங்களில் CHOKE-இ விடும் என்று தெரிந்தோ என்னவோ, நிடா அம்பானி பங்களுர் பக்கம் தலைகாட்டவில்லையோ? எல்லாவற்றையும் விட, ஆட்டம் முடிந்த பிறகு, பேட்டி என்ற பெயரில் டேனி மாரிஸன் பிரசித்தி பெற்ற ஐபிஎல் குட்டிகள் ஷிபாங்கி மற்றும் அர்ச்சனா விஜயாவுடன் அடித்த லூட்டி தான் நேற்றைய ஹைலைட் ;-)

இப்படியாக, சென்னை சூப்பர் கிங்க்ஸ் (CSK) Mumbai Choker Indians (MCI) அணியை (எதிர்பார்த்தது போல) முக்கியமான எலிமினேட்டர் ஆட்டத்தில் வென்றது! MCI அணி சென்னையை 2 குரூப் ஆட்டங்களிலும் ஜெயித்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே! ஆனால், என்ன பிரயோஜனம்? இப்போதிலிருந்து, சென்னைக்கு 1 match at a time & 2 to go, இரண்டும் நம்மூர் சேப்பாக்கத்தில்! நம்பிக்கையே வாழ்க்கையின் உயிர்நாடி :-)

எ.அ.பாலா

Saturday, May 12, 2012

IPL5 CSK vs RR சென்னைக்கு ஒரு ராயல் வெற்றி

IPL5 CSK vs RR சென்னைக்கு ஒரு ராயல் வெற்றி


தோனி டாஸில் ஜெயித்தது நல்லதாக போயிற்று. அதனால் முதலில் பேட் செய்த ராஜஸ்தானை, 2-3 முறை மழை பெய்து கழுத்தறுத்ததில், விக்கெட்டுகளை இழந்து, 9 ஓவர்களில் 43-3 என்று பரிதாபமான நிலையில் இருந்தது. சென்னையின் பந்து தடுப்பிலும், பந்து வீச்சிலும் ஒரு purpose தெரிந்தது! ஹில்ஃபன்ஹாஸையும் யோ மகேஷையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். என்ன தான், மழை மற்றும் பிட்ச் காரணமாக பந்து வீச்சுக்கு ஆதரவு இருந்தாலும், அவர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் பந்து வீசினர்.

ஹில்ஃபன்ஹாஸ், field restriction இருந்த முதல் 6 ஓவர்களில், அதுவும் மும்பைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஏற்பட்ட பெருத்த ஏமாற்றத்தை தள்ளி வைத்து விட்டு, தொடர்ச்சியாக 4 ஓவர்கள் வீசி, 8 ரன்களே கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே, சென்னைக்கு நல்லதொரு தொடக்கத்துக்கு வழி வகுத்தது! மகேஷ் 4-0-21-2. பிரேவோ ரன்களை சற்றே வழிய விட்டதால் (3 ஓவர்கள், 38 ரன்கள்), ராஜஸ்தான் 126 ரன்கள் எடுத்தது, நான் 110 தான் தேறும் என்று எண்ணினேன்.

மிகவும் சுலபமாக சென்னை ஜெயித்து விடும் என்று எப்போதும் போல நம்பினேன் :) முதல் வாட்சன் ஓவரிலேயே முரளி விஜய் முட்டை-அவுட் ஆனார். டைட் தனது பந்து வீச்சில் 150 கிமீ வேகத்தை சர்வசகஜமாகத் தொட்டார்! 6-வது ஒவரில், 23 ரன்கள் எடுத்து, நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரைனாவும் காலி. 2-டவுன் பிரேவோ களமிறங்கினார். (ச)செம்மையாகத் தடவினார்! 12வது ஓவரில், அவரது நரக வேதனை முடிவுக்கு வந்தது! 60-3, RRR 8.4.

ஹஸ்ஸியை ரன் அவுட் ஆக்கியதோடு இல்லாமல், தானும் ரன் எடுக்க எந்த முயற்சியும் எடுக்கத் தயங்கிய தோனியின் தயவால், ராஜஸ்தான் பக்கம் ஆட்டம் மொத்தமாகத் திரும்பியது. ஜடேஜா பந்தை அடிக்க முயற்சியாவது செய்தார். திருவாளர் கேப்டன் தோனி, திரிவேதியின் 110 கிமீ பந்துகளை, க்ரீஸுக்குள் இருந்தபடியே, நடனமாடி கஷ்டப்பட்டு தடுத்து ஆடிக் கொண்டிருந்ததைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. யாராவது அவரை தடுத்தாட்கொண்டால் நல்லது என்று தோன்றியது ;) இப்படி சொதப்பி, 16வது ஓவரில் தோனி (10, 16 பந்துகளில்) வீழ்ந்தபோது, ஸ்கோர் 80-5, தேவையான ரன்ரேட் 11.8 !!!

உடனடியாக ஜடேஜாவும் அவுட்! இரு புது மட்டையாளர்கள் களத்தில், மார்க்கல், அனிருத்தா. இவர்களை Nothing to Lose என்ற நிலைக்கு (22 பந்துகளில் 43 ரன்கள்) தள்ளியதற்காவது தோனியை பாராட்டியே தீர வேண்டும்!!! அப்புறம் நடந்தது தான் எல்லாருக்கும் தெரியுமே :-) பங்கஜ், வாட்சன், டைட் என்று எல்லாருமே ஒரு வாங்கு வாங்கப்பட்டதில், 18.1 ஓவர்களிலேயே, சென்னைக்கு ஒரு நம்பமுடியாத வெற்றி! அதுவும், டைட்டின் பந்தில் அனிருத்தா அடித்த சிக்ஸர் கண்ணிலேயே நிற்கிறது! சென்னை தோற்கவே கூடாத ஆட்டத்தில் தோற்றும், ஜெயிக்கவே முடியாத ஆட்டத்தை ஜெயித்தும், இந்த IPL-இல் அடிக்கும் கூத்தை என்னவென்று சொல்ல :)

சில குறிப்புகள்: இந்த IPL-இல் சென்னை பேட்டிங் பல ஆட்டங்களில் சொதப்பலாக இருந்தது என்பதை தோனியே ஆட்ட முடிவு பேட்டியில் ஒப்புக்கொண்டார். இந்த லட்சணத்தில் ஆடினால், அடுத்த சுற்றுக்கு சென்னை தேறினாலும், கோப்பையை வெல்வது மிக மிக கடினம். பேட்டிங் ஆர்டரை அடிக்கடி மாற்றியதில், ஸ்திரத்தன்மை போய் விட்டது! தலைவர் தோனி ஃபார்மில் இல்லாததால், அவர் 2 அல்லது 3-டவுன் வருவதில் எந்த பயனும் இல்லை என்பது தெளிவு! அதனால், ரெய்னா, ஜடேஜா, பிரேவோவுக்குப் பின் அவர் வருவது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது!

இனி வரும் 3 குரூப் ஆட்டங்களில், ஜடேஜா பேட்டிங் ஃபார்முக்கு / அவருக்கு பொறுப்பு வருவதற்கும் இது வழி வகுக்கும்! அதுவும் இலக்கைத் துரத்தும்போது, இது இன்னும் முக்கியமாகிறது! தோனி, தொடர்ந்து 10 to 15 ஓவர்களில் செய்யும் சொதப்பலால், RRR கண்டபடி எகிறி, அடுத்து வரும் பேட்ஸ்மன்களுக்கு அனாவசிய அழுத்தம் ஏற்படுகிறது! அது போல, சென்னை முதலில் பேட் செய்யும் ஆட்டங்களிலாவது, ஒரு 5-6 ஓவர்கள் இருக்கும் சூழலில், மார்க்கல் களமிறங்குவது மிக அவசியம்!

2-3 வருடங்களாக, தொடர்ந்து, ஐபிஎல் ஆட்டங்களில் சென்னை ரசிகர்களை இருக்கை நுனிக்கு இட்டு வந்து டென்ஷன் கொடுப்பதை ஒரு கலைவடிவமாகவே சென்னை அணி ஆக்கி விட்டது :) பலம் வாய்ந்த தில்லி அணியும், கெய்லையும், டிவிலியர்ஸையும் (மட்டுமே) நம்பியிருக்கும் டுபாக்கூர் பங்களூர் அணியும், பல ஆட்டங்களை ஓசியில் ஜெயித்த, உருப்படாத மும்பை அணியும் அதை விட உருப்படாத கொல்கத்தா அணியும் ஐபிஎல் கோப்பையை அண்டாத அளவுக்கு சென்னை அணி பார்த்துக் கொள்ளும் பட்சத்தில், டிவிட்டரில் உலவும் @elavasam @njganesh போன்ற சென்னை அணி ரசிகர்கள் இந்த டென்ஷனை மிக்க மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள் :-) நான் சென்னை ரசிகன் கிடையாது!

காரணம்: எனக்கு ”சென்னை வெறியன்” சாரி, வெறியர் என்ற பட்டத்தை மிக்க அன்போடு டிவிட்டரில் வழங்கிய நண்பர் @njganesh -க்கு நன்றி :)




Saturday, May 05, 2012

IPL5 - RCB vs KXIP - இதல்லவோ டி-20 ஆட்டம்!

IPL5 - RCB vs KXIP - இதல்லவோ டி-20 ஆட்டம்! - எ.அ.பாலா



நேற்று சின்னசாமி அரங்கில் சில நம்ப முடியாத விஷயங்கள் நடந்தன! டாஸில் வென்ற டேவிட் ஹஸ்ஸி அதற்கு முந்தைய நாள் பெய்த மழை காரணமாக முதலில் பந்து வீச முடிவு செய்தது, சரியான தேர்வு என்று தான் சொல்ல வேண்டும். பங்களூர் அணி தொடக்கத்திலேயே அடிதடிக்கு அஞ்சாத அகர்வாலை இழந்தது. இதுவரை நடந்த ஆட்டங்களில் ”நிறத்துக்கப்பால்” காணப்பட்ட பிரவீன் குமாரின் பந்து வீச்சை விவரிக்க/வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!!! 4-0-8-0.

கெய்ல், விராத் கோலிக்கு எதிராக இத்தகைய பந்து வீச்சை அதி அற்புதம் என்று தான் கூறுவேன்! அவர் பந்து வீச்சில், பந்து காற்றிலும், பிட்ச் ஆனபின்னும், ஒரு குடிகாரனைப் போல நிலை தடுமாறியதில், கெய்ல் என்ற புலி எலியானது, சற்றே ஃபார்மில் இல்லாத கோலி சுண்டெலியானது ;-) 9 ஓவர்களில் பங்களுர் எடுத்தது 48 ரன்கள் மட்டுமே.



அடுத்து பந்து வீச வந்த சவ்லாவையும், அவானாவையும் எதிர்த்து, கெய்ல் கோர தாண்டவம் ஆடியபோதும், ஆசார் மெஹ்மூதின் பந்து வீச்சில் அவரது டி20 அனுபவம் மிளிர்ந்தது. 16வது ஓவரில் மெஹ்மூத் கெய்லை (71, 42 பந்துகளில்) வீழ்த்தினார். அடுத்த ஓவரில் கோலியும் காலி. 17 ஓவர்களில் ஸ்கோர் 135-3. மெஹ்மூத் தான் வீசிய 20வது ஓவரில், டிவிலியர்ஸ், மெக்டொனால்ட் விக்கெட்டுகளை சாய்த்து, நான்கே ரன்கள் கொடுத்து தனது அருமையான ஸ்பெல்லை (4-0-20-3) பூர்த்தி செய்தார்! பங்களூர் மொத்தம் 158 ரன்கள்.

பஞ்சாபின் துரத்தல் சுறுசுறுப்பாகத் தொடங்கியது. மந்தீப் சிங், சாகீர் கானை ஒரு கிளப் பந்து வீச்சாளரரைப் போல அணுகியதில், மார்ஷ் விக்கெட்டிழந்தும், ஸ்கோர் 8 ஓவர்களில் 70/1 என்று பஞ்சாப் ஆரோக்கியமான நிலையில் இருந்தது! அப்பண்ணா வீசிய 9வது ஓவரில் மந்தீப் அவுட். களமிறங்கிய கேப்டன் ஹஸ்ஸி, அப்பண்ணா வீசிய 13வது ஓவரிலும், பதான் வீசிய 16வது ஓவரிலும் செய்த துவம்சம் காரணமாக, பஞ்சாப் ஸ்கோர் 146-2. ஹஸ்ஸி 41 ரன்கள், 22 பந்துகளில் !!!

4 ஓவர்களில் 13 ரன்களே தேவை (8 விக்கெட்டுகள் கையில்) என்று தோற்கவே முடியாத நிலையில் இருந்தபோது, ’தோற்றே தீருவோம்’ என்று பஞ்சாப் பிரம்ம பிரயத்தனத்தில் இறங்கி, Harakiri செய்யவிருப்பதை அறியாத நான், சில மணித்துளிகள் வேறு சேனலுக்குத் தாவி மீண்டும் திரும்பி வந்து பார்த்தால், சைனியும், மஹ்மூத்தும் அவுட்டாகி, ஸ்கோர் 151-4. 14 பந்துகளில் 8 ரன்கள் என்பது ஹஸ்ஸி இருக்கையில் எளிது என்றபோதும், சின்னசாமியே ஏனோ டென்ஷனில் இருந்த மாதிரி தோன்றியது என் பிரமையா என்று தெரியவில்லை :-)

சாகீர் வீசிய அருமையான 19வது ஓவரில், 2 ரன் அவுட் (ஹஸ்ஸி, நய்யார்), 2 ரன்கள் மட்டுமே! அதாவது, 17,18,19-வது ஓவர்களில் பஞ்சாப் எடுத்தது 8 ரன்கள், இழந்தது 4 விக்கெட்டுகள், அதில் 3 ரன் அவுட் !!!! இந்த நம்ப முடியாத மகா கூத்துக்கு ஒரே காரணம், மர்ஃபியின் II Law of Thermodynamics --- Things get Worse under Pressure ;-) இறுதி ஓவரில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் 2 dot பந்துகள், 3வதில் 2 ரன்கள், நாலாவதில் 1 ரன். இப்போது 2 of 2 தேவை. நிற்க!

பெங்களுர் ஜெயிப்பது, சென்னையின் அடுத்த சுற்று தகுதி வாய்ப்புக்கு நல்லதில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், ப்ரீதி ஜிந்தாவின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்த டென்ஷனைப் பார்த்து மனம் கலங்கியே, பஞ்சாப் ஜெயிக்க வேண்டும் என்று வேண்டி விரும்பினேன் என்ற உண்மையை (இதை ஏதாவது ஒரு அனானி நண்பர் கண்டுபிடித்து கமெண்ட் போடுவதற்குள்) நானே சொல்லி விடுவது உத்தமம் ;-) அந்த 5வது பந்தை பியுஷ் சாவ்லா கூலாக சிக்ஸர் அடித்து, ப்ரீதியை டென்ஷனிலிருந்து விடுவித்தார்!

இது போன்ற “நகம் கடி” ஆட்டங்களை வைத்துப் பார்க்கும்போது டி-20 கிரிக்கெட்டுக்கு சூரியனைப் போன்ற பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பது எள்ளளவும் சந்தேகமில்லை! பின்னர் ப்ரீதியை பேட்டி எடுத்தபோது, இறுதி ஓவரில் தனக்கு இதயமே நின்று விடுவது போல உணர்ந்ததாக சந்தோஷமாகவே கூறினார்! ஆக, பஞ்சாப் அடிக்கடி ஜெயித்து, ப்ரீதி ஜிந்தா போன்ற மெல்லிய இதயம் படைத்தவர்கள், ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருப்பது எல்லாருக்கும் மகிழ்ச்சி தானே! என்ன நான் சொல்றது :-)

Glossary:
நகம் கடி - NAIL BITING
நிறத்துக்கப்பால் - OFF COLOUR

IPL5 CSK vs KKR -சேப்பாக்கத்தில் சொதப்பிய சென்னை

IPL5 CSK vs KKR -சேப்பாக்கத்தில் சொதப்பிய சென்னை


கடந்த ஒரு 4-5 IPL ஆட்டங்களை ஏனோ பார்க்கவில்லை! இம்முறை Mr.Cricket மைக்கேல் ஹஸ்ஸி சென்னை அணியில் இருந்ததால், இந்த ஆட்டத்தில் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையில் டிவி முன் உட்கார்ந்தேன். (என் நல்ல காலம், டிக்கெட் இருந்தும், சேப்பாக்கத்துக்கு செல்லவில்லை!) ஆட்டத்தில் ஜெயிக்கிறாரோ இல்லையோ, டாஸில் தோனி ஜெயித்து விடுகிறார்! சென்னை முதல் பேட்டிங் செய்தது.

டுபிளஸ்ஸி 2வது ஓவரிலேயே லீ பந்து வீச்சில் காலி. 5வது ஓவரில் ஹஸ்ஸி தன்னைத் தானே ரன் அவுட் ஆக்கிக் கொண்டார்! ரைனா நன்றாக ஆடிக்கொண்டிருந்தது சற்று ஆறுதல். 10 ஓவர்களில் 74-2, ஆடுகளத்தின் தன்மையை (பந்து பிட்ச் ஆனவுடன், பந்தின் வேகம் கணிசமாக குறைந்து விடுவதை) வைத்து பார்க்கும்போது, இதை நல்ல நிலைமை என்று தான் கொள்ள வேண்டும்! 155-160 ரன்கள் எடுத்து விட்டால், கொல்கத்தாவுக்கு ஆப்பு உறுதி என்றும் தோன்றியது!


பிரேவோவும் ரைனாவும் சீக்கிரமே விக்கெட் இழந்தார்கள். தோனியும், மில்லியன் டாலர் பேபி ஜடேஜாவும் சோபிக்கவில்லை. நரைனின் அருமையான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பயங்கரமாகத் தடவினார்கள். 17 ஓவர்களில் 113/4. 140 கூட தேறாது என்று புரிந்தது. பிரேவோ, அஷ்வின் தவிர்த்து நம்மிடம் இருக்கும் பந்து வீச்சை வைத்துக் கொண்டு 140-ஐ defend பண்ணுவது கடினம் என்றும் புரிந்தது. சென்னையின் மரண வேதனையின் முடிவில் மொத்த ஸ்கோர் 139!

இம்மாதிரி ஆடுகளத்தில் திறமையும், நிதானமும் உள்ள மட்டையாளர்கள் மட்டுமே பரிமளிப்பார்கள் என்பதற்கு கம்பீரும், காலிஸும் சிறந்த உதாரணங்கள். மெக்கல்லம் 3வது ஓவரிலேயே அவுட்டான பின், இருவரும் ஜோடி சேர்ந்ததில், 12 ஓவர்களில் 82-1. காலிஸ் அவுட்டான பிறகும், கம்பீர் RRR 8-க்கு மேல் போகாமல் பார்த்துக் கொண்டார். திவாரியும், கம்பீரும், பதானும், 18, 19 மற்றும் 20வது ஓவர்களில் விக்கெட்டிழந்து, Climax-இல் சற்றே சுவாரசியம் கூடியபோதும், சென்னைக்கு Anit-climax ஆக ஆட்டம் முடிந்தது. சேப்பாக்கம் என்ற CSK-யின் கோட்டை மதிள்சுவரில் விரிசல்கள் தோன்ற ஆரம்பித்திருப்பதால், சென்னை ரசிகர்கள் ரொம்பவும் எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது அவர்கள் உடம்புக்கு நல்லது :-)

இத்தனை "பெத்த" பேரு மட்டையாளர்களை வைத்துக் கொண்டு (டுபிளஸ்ஸி, ஹஸ்ஸி, தோனி, ரைனா, ஜடேஜா, பிரேவோ, மார்க்கல், பத்ரி) 139 ரன்கள் எடுத்த ஒரு லாயக்கில்லாத அணி தோற்றது நியாயம் என்று தான் நினைக்கிறேன்! அதோடு, மார்க்கல் போன்ற பலம் வாய்ந்த hitter-களுக்கு ஒவ்வொரு ஆட்டத்திலும், கடைசியில் 8-10 பந்துகள் ஆடக் கிடைத்தால், அவர் தான் என்ன செய்ய முடியும்?
இந்த IPLலில் (மொத்தம் 8 ஆட்டங்களில், மும்பைக்கு எதிரான ஆட்டம் தவிர்த்து) அவருக்கு ஆடக் கிடைத்த வாய்ப்பு 7-8 ஓவர்கள் தான். இதில் என்னத்தை கிழிக்க முடியும்! அது போலவே, ரைனா கடந்த இரு IPL-கள் போல இந்த IPL-லில் பிரகாசிக்காதது சென்னையின் பின்னடைவுக்கு ஒரு முக்கியக் காரணம்.

தோனியும், பயிற்சியாளர் ஃபிளெமிங்கும், பிற பயிற்சியாளர்களும், திறமையான வீரர்கள் கொண்ட காம்பினேஷன் இருந்தும் சென்னையின் தொடர் தோல்விகளுக்கான காரணங்களை அலசி, புது திட்டங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அது போலவே, என்னைப்போன்ற சென்னை ரசிகர்கள், கேல்குலேடரை கையில் வைத்துக் கொண்டும், Spreadsheet அனாலிஸிஸ் செய்தும், எத்தனை ரன் வித்தியாசத்தில், எவன் ஜெயித்து எவன் தோற்பதால், எந்த ஆட்டத்தில் மழை பெய்வதால், சென்னை அணி (எப்படியாவது) அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்யத் தயாராக வேண்டும் ;-)

சென்னை சூப்பர் கிங்க்ஸ் (CSK) தங்கள் பெயரை "சென்னை சப்பைக் கம்மனாட்டிகள்" என்று மாற்றிக் கொள்ளலாம்! இந்த இடுகையில், யாரையும் திட்டக்கூடாது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், "முடியல", மன்னிக்கவும்!

எ.அ.பாலா

Friday, April 20, 2012

IPL5 -RCB vs PW -பங்களூர் கண்ட எழுச்சி!

நேற்று சின்னசாமி அரங்கில் நடந்த ஆட்டத்தில், டாஸை வென்ற தாதா முதல் பேட்டிங்கை தேர்வு செய்தார்! (கெய்லின் கொலவெறிக்கு தொடக்கத்திலேயே வாய்ப்பு தர வேண்டாம் என்ற எண்ணமோ என்னவோ :)) ரைடர்-ராபின் உத்தப்பா களமிறங்கினர். உத்தப்பா இம்முறை ’ஊத்தப்பா’ போல சொதப்பாமல், ராபின்(ஹுட்) போல பரிமளித்தார்! இந்த நேரத்தில் உங்களுக்கு, மும்பையின் பல கோச்களில் ஒருவரான ராபின் சிங் நினைவுக்கு வரவே கூடாது!

5 நாள் டெஸ்ட் ஆடும் அணிகளுக்குக் கூட ஒன்றிரண்டு பயிற்சியாளர்கள் தான். ஆனால், இந்த 40 ஓவர் ஐபிஎல் கூத்துக்கு, ஒவ்வொரு அணிக்கும், பேட்டிங் கோச், ஃபீல்டிங் கோச், போலிங் கோச், ரன்னிங் கோச், ஜாகிங் கோச் ... என்று நவஜீவன் எக்ஸ்பிரஸ் போல இத்தனை கோச்களும் கம்ப்யூட்டர் அனலிஸ்ட், உடற்பயிற்சியாளர், உளவியல் வல்லுனர் என்று உதிரிகளும் ஏன் என்று புரியவில்லை! ஆனால், அதே நேரம், சியர் லீடர்ஸ் அவசியம் என்பது மிகத்தெளிவாகப் புரிகிறது!

அதோடு, ஐபிஎல்-இல் பணத்தை தண்ணி போல இறைத்து, கிரிக்கெட் பைத்தியம் பிடித்த நம் மக்களுக்கு அப்பைத்தியம் துளியும் தெளியாமல் பார்த்துக் கொள்ளும் BCCI-இன் கெட்டிக்காரத்தனத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! போட்ட துட்டை விட பல மடங்கு அள்ளி விடுகிறார்கள் என்பது வேறு விஷயம். இது BCCI-இன் நிர்வாகிகள் (ஓசியில்) ராஜ வாழ்க்கை வாழ்வதற்கு வழி வகுக்கிறது! இருட்டுச்சந்தில் ஒளிந்து கொண்டிருக்கும் அனானி “அகங்காரம் பிடித்த பாலா, கிரிக்கெட் ரசிகர்களை பைத்தியம் என்கிறார்” என்று கூக்குரல் இடுவதற்கு முன் ஒரு விஷயம் :) நான் சொன்ன அந்த கிரிக்கெட் பைத்திய பட்டியலில் முதல் ஆள் அடியேன் தான் என்று கூறி விடுகிறேன்!

சரி, ஆட்டத்துக்கு வருகிறேன்! 7 ஓவர்கள் முடிவில், ரைடர் அவுட், புனே 63-1 என்று நல்லதொரு தொடக்கம். உத்தப்பா ஆட்டம் இன்னும் சூடு பிடித்ததில், அவர் (69 of 45) அவுட்டானபோது, ஸ்கோர் 117-3 (13 ஓவர்களில்) என்று புனே வலுவான நிலையில் இருந்தது. ஸ்மித் அவ்வளவு பிரகாசிக்கவில்லையெனினும், சாமுவேல்ஸ் ஒரு வாங்கு வாங்கியதில் (34 of 20), புனே 182 ரன்கள் என்ற இலக்கை அடைந்தது.

கெய்ல், தில்ஷன் களமிறங்கியும், பங்களூரின் தொடக்கம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை! 10 ஓவர்கள் முடிவில், பங்களுர் 63-2. கெய்ல் அதிரடி எதுவும் இல்லை! ஆனால், அவர் (35 of 30) ஆட்டமிழக்காமல் இருந்தது பங்களூருக்கு ஆறுதலான விஷயம்! 12வது ஓவரில் கோலி அவுட்!!! தேவையான ரன்ரேட் 13.4 என்று RCB ரசிகர்களின் வயிற்றைக் கலக்கியது. Enough is enough என்று முடிவு செய்தது போல, கெய்ல், புனேவின் பெஸ்ட் பந்து வீச்சாளர் ராகுல் சர்மாவை தனது வதத்துக்கு இலக்காக தேர்ந்தெடுத்து, 13வது ஓவரில் செய்த துவசம்சத்தில் 5 சிக்ஸர்கள், அந்த ஓவரில் 31 ரன்கள்.

கெய்ல் பார்க்கத் தான் நெடுநெடுவென்று புஜபராக்கிரம காட்டான் மாதிரி தெரிகிறார்! ஆனால், அந்த 5 சிக்ஸர்களும் டைமிங்கோடு கூடிய அருமையான cricketing shots. கெய்ல் ஆடும்போது நேர் அம்பயர் ஹெல்மட் அணிந்து கொள்ளுதல் நலம் என்று எனக்குத் தோன்றியது! கெய்லின் இந்த விளாசல் காரணமாக, 6.3 என்ற ரன்ரேட் ஒரே ஓவரில், 8.3க்கு சென்றது. RRR 10.85

நல்ல பந்து வீச்சு காரணமாக ஆட்டம் மீண்டும் மெல்ல புனே பக்கம் சாயத் தொடங்கியது. 16வது நெஹ்ரா ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்து, அடுத்த யார்க்கர் பந்தில் கெய்லின் அருமையான இன்னிங்க்ஸ் (81 of 48) முடிவுக்கு வந்தது. RRR 13.8

சௌரப் திவாரி தடவிக் கொண்டிருந்தார்! டிவிலியர்ஸ் களமிறங்கினார். டிவிலியர்ஸ் மாத்யூஸ் வீசிய 18வது ஓவரில் (reverse switch hit) சிக்ஸர் அடித்தார்! பிரமாதமான Improvisation, Shot of the Day! சுத்தமாக பேலன்ஸ் இல்லாத நிலையில், டிவிலியர்ஸ் அத்தனை பலத்தை பிரயோகித்ததைப் பார்த்து பிரமிப்பாக இருந்தது!! திவாரிக்கும் ரோஷம் வந்து, அவரும் ஒரு சிக்ஸ் :)

இதற்கு நடுவில், மைதானத்தில், புலியைப் (சிவமணி) பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக, ஒரு ஜில்பா தலையர் டிரம்ஸ் தட்டிக் கொண்டிருந்தது நல்ல நகைச்சுவை காட்சி ;-) கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் தேவை. டிண்டாவின் அந்த அற்புதமான ஓவர் ஒரு anti climax. 7 ரன்கள் மட்டுமே கொடுத்து, கடைசி ஓவர் வீச இருந்த அனுபவமிக்க நெஹ்ராவுக்கு 21 ரன்கள் மிச்சப்படுத்தினார். புனே வெற்றி என்று உறுதியாக நம்பினேன்!

ஆனல், டிவிலியர்ஸ் வேறு திட்டம் வைத்திருந்தது எனக்குத் தெரியாமல் போய் விட்டது :-) அவரது improvisation திறமையையும், Never say Die attitude-ஐயும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். கடைசி 4 பந்துகளில் 16 தேவை என்ற நிலையில், 2 low full toss பந்துகளை சிக்ஸர்கள் அடித்து, சமன்பாட்டை 2 பந்துகளில் 4 ரன்கள் என்று ஆக்கினார். 5வதில் ஒரு ரன் மட்டுமே. டிவிலியர்ஸ் காரணமாக ஏற்கனவே ரோஷம் பொங்கிய நிலையில் இருந்த திவாரி, கடைசிப்பந்தை பவுண்டரிக்கு வெளியே அனுப்பியதில், RCBக்கு ஒரு famous WIN.

உடனே, வானம் பொத்துக் கொண்டு மழை கொட்டியது, வானத்து இமையவர் வாழ்த்து போல அமைந்தது! அத்துடன், சென்னைக்கு எதிராக கோலி வீசிய அந்த 28 ரன் ஓவர் மூலம் RCBக்கு பிடித்த சனி, இந்த அற்புதமான வெற்றி மூலம் விலகியது என்றும் கூறலாம் ;-) இப்படியாக, ஆட்டத்தில் 38 ஓவர்கள் (கெய்ல் 5 சிக்ஸர்கள் அடித்த ஓவரையும், கடைசி ஓவரையும் தவிர்த்து) பின் தங்கியிருந்த பங்களூர் அணி, ஒரு பிரமாதமான வெற்றியை பெற்றது!!!!!

எ.அ.பாலா

Monday, April 16, 2012

IPL5 -RCB vs RR -போலி ராயலை வீழ்த்திய நிஜ ராயல்கள்!




பெங்களூர் அணி மூன்றில் 2 ஆட்டங்கள் தோல்வியடைந்திருந்த நிலையில், இந்த ஆட்டம் சுவாரசியமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ராஜஸ்தான் அணி, முதலில் பேட் செய்து, சகீர், முரளி மற்றும் வெட்டோரி என்ற 3 Veteran-களின் அனுபவத்திறமை வாய்ந்த பந்து வீச்சின் காரணமாக, 13 ஓவர்களின் முடிவில், 82-1 (டிராவிட் விக்கெட் இழப்பு) என்ற மிகச் சாதாரண நிலையில் இருந்தது! ரஹானேயும், ஷாவும் ஆடிக்கொண்டிருந்தனர்.

சகீர் 3-1-10-0
முரளி 3-0-18-0
வெட்டோரி 3-0-14-1


14வது ஓவரில், ரஹானேவுக்கு கொலவெறி பிடித்து, அரவிந்தின் மிக சராசரி பந்து வீச்சில், 6 பவுண்டரிகள் விளாசினார். இதில் ஒன்று கூட காட்டுத்தனமான ஷாட் கிடையாது! ஒரே ஓவரில் ரன்ரேட் 6.3லிருந்து 7.6க்கு எகிறியது :-) 16, 17 மற்றும் 18வது ஓவர்களில், ஷாவும் ரஹானேவுடன் சேர்ந்து கொண்டு கெய்ல், வினய், முரளி பந்துவீச்சை துவம்சம் செய்ததில், சின்னசாமி அரங்கில் ரன் மழை பெய்தது! இந்த 3 ஓவர்களில் 62 ரன்கள்! அரங்கில் பல RCB ரசிகர்கள் மூர்ச்சை அடைந்த நிலைக்கு சென்று விட்டனர் :-)

இந்த ரணகளத்திலும், 19வது ஓவரை சகீர் மிகச் சிறப்பாக வீசினார். 4 உதிரிகளை தவிர்த்து, அவர் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து ஷாவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். 20வது ஓவரில் ரஹானே தனது சதத்தை (58 பந்துகள்) பூர்த்தி செய்தார். இதை ஐபிஎல் ஆட்டங்களின் மிக நேர்த்தியான சதம் என்று கூறுவேன். சின்னசாமியில் புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது. இறுதி 7 ஓவர்களில் ராஜஸ்தான் எடுத்தது 113 ரன்கள் (பிரதி ஓவர்: 16.1) !!!!!!!!! ராஜஸ்தான் மொத்த ஸ்கோர் 195.

கோலி, ரஹானே இருவருமே திறமைசாலிகளாக இருப்பினும், Temperament-ஐ பொறுத்த அளவில், ரஹானே பெட்டர் என்று தாராளமாக கூறலாம். ஜடேஜா, முரளிவிஜய் போன்றவர்கள் ரஹானேவிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது!

பெங்களூர் அணியிடம் பலமான பேட்டிங் (கெய்ல், அகர்வால், கோலி, டிவிலியர்ஸ்..) இருப்பதால், “துரத்தல்” சுவாரசியமாக இருக்கும் என்று எல்லாரையும் போல நானும் நம்பினேன்! 4 ஓவர்களில், பெங்களூர் 38-0. அகர்வால் 30, கெய்ல் -8 !!! பங்கஜ் சிங் வீசிய 5 ஓவரில் துரத்தல் சற்றே தடம் புரண்டது. அகர்வால், கெய்ல் இருவரும் வீழ்ந்தனர். ஸ்கோர் 42-2. கோலி, டிவிலியர்ஸ் ஜோடி சேர்ந்து ஆடிக் கொண்டிருந்தனர். 8 ஓவர்களில் 63-2.

9வது ஓவரில், மொகிந்தர் அமர்நாத் ஸ்டைல் “பொய்” பந்துவீச்சு எக்ஸ்பர்ட் சித்தார்த் த்ரிவேதியின் 107 கிமீ வேகப்பந்தை டிவிலியர்ஸ் ஸ்டம்ப்பில் இழுத்து விட்டுக் கொண்டார்! தனது அடுத்த ஓவரில் (11வது) த்ரிவேதியின் மற்றொரு மிதவேகப்பந்து கோலியின் நடு ஸ்டம்பை தகர்த்தது! ஸ்கோர் 79-4. என்னளவில், இது RCB சவப்பெட்டியில் அறையப்பட்ட கடைசி ஆணி! 2 ஆண்டுகளுக்கு முன் ரொம்ப பேசப்பட்ட சௌரப் திவாரி, எப்போதும் போல சொதப்பி (17 of 16) த்ரிவேதியின் 4வது ஓவரில் Clean Bowled. அதே ஓவரில் வெட்டோரியும் அவுட்(Clean Bowled). த்ரிவேதி 4-0-25-4. 15 ஓவர் முடிவில், 105-6, தேவையான ரன்ரேட் 18.20. ஆமென்!

யோஹன் போத்தாவின் அடுத்த (16வது) ஓவரில், மொஹமத் கைஃப் அவுட்டானதும், போத்தா தனது மூக்கின் மேல் இருந்த வியர்வையை எடுத்து அவருக்கு “ப்ரோஷணம்” பண்ணி அனுப்பி வைத்த காட்சி நல்ல நகைச்சுவை ;-) அதே நேரம், அரங்கில் இருந்த சித்தார்த் மால்யா தலையை ஆட்டியபடி சோகமாக அமர்ந்திருந்ததும், ரசிக்கத் தக்கதாய் இருந்தது! அவருடன் இப்போதெல்லாம் தீபிகா படுகோனை காண முடிவதில்லை. ஒருவேளை தீபிகா கழட்டி விட்டிருப்பாரோ? அப்படியிருப்பின், தீபிகா தனது வாழ்வில் எடுத்த ஒரு சிறந்த முடிவு அது என்பதில் ஐயமில்லை :)

17வது ஓவரில் வினய்குமாரின் விக்கெட்டை எடுத்த அமித் சிங், அந்த ஓவரின் கடைசி பந்தில், ஒரு பவுண்டரி கொடுத்ததற்கு (அதுவும், 3 ஓவர்களில் 76 ரன்கள் தேவை என்ற சூழலில்) மிகவும் வருத்தப்பட்டு கொண்டது, ராஜஸ்தான் அணியின் Spirit-க்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பாவம் முரளிதரன்! இத்தனை பேட்டிங் ஜாம்பவான்கள் உள்ள RCB அணியில் தான் பேட் பிடிக்க நேரிடும் என்று எதிர்பார்த்திருக்கவே மாட்டார்! முரளி 20வது ஓவரில் அவுட்டாகி, ராஜஸ்தான் 59 ரன்களில் பெருவெற்றியை பெற்றது! Rajasthan Royals had Warne as captain and now Rahul Dravid, 2 contrasting captains but inspiring leaders in their own way!

இப்படியாக, நிஜமான ராயல்கள் போலி ராயல் அணியை (அணியின் பெயரில் ராயலும், flamboyant ஓனரும், உலகமகா கிரிக்கெட்டர்களும் இருந்தால் மட்டும் போதுமா?! ) மண்ணைக் கவ்வ வைத்தனர்!

IPL5 - CSK vs PW -சிங்கத்தை அடக்கிய ராயல் பெங்கால் புலி


ஆட்டத்தை பற்றிச் சொல்ல பெரிதாக எதுவுமில்லை! முதல் பேட்டிங் என்ற தோனியின் தேர்வு சரியான ஒன்றே. சென்னையின் பேட்டிங் பலத்தை வைத்துப் பார்த்தால், புனே ஆடுகளத்தில் குறைந்தபட்சம் 170 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால், கேப்டன் தோனியின் சொதப்பல் பேட்டிங்கால் (19 ஓவர்கள் முடியும் வரை கழுத்தறுத்து 28 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த கேவலத்தால்!), ஜடேஜா அற்புதமாக ஆடியும் (44 of 26) சென்னை எடுத்த மொத்த ஸ்கோர் 155 ரன்களே!

டுபிளஸ்ஸி ஆட்டம் எப்போதும் போல சிறப்பு! மொ.க விஜய் குறித்து சொல்ல ஒன்றுமில்லை. அடுத்த ஆட்டத்தில், அனிருத்தா இடம் பெற்றால் நல்லது. தோனி, முதலில் ஆடினாலும், இலக்கு நோக்கி ஆடினாலும், கடைசி 2-3 ஓவர்களில் விளாசி சரிக்கட்டி விடலாம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளுதல் நலம் பயக்கும்! 14 ஓவர்கள் முடிவில் 106-3 (மார்க்கல், பிரேவோ வெயிட்டிங்!).. என்ற நிலையில், 7 விக்கெட்டுகள் இருந்த சூழலில், சென்னை அணி இறுதி 6 ஓவர்களில் எடுத்தது 49 ரன்கள் மட்டுமே! எதிரணியில், ரைடர், உத்தப்பா, ஸ்மித், சாமுவேல்ஸ் என்று பலமான மட்டையாளர்கள் இருக்கையில், 155 எடுத்த சென்னை வெளங்காம போறதுக்கு சாத்தியங்கள் அதிகம்!

புனே முதல் 6 ஓவர்களை சரியாக பயன்படுத்திக் கொண்டதில் ஸ்கோர் 56-1. 15 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 106-3 (சென்னை 14 ஓவர்களில் இருந்த அதே நிலை!) (Req.RR 10). ஒரு fighting finish என்ற அளவுக்கு ஆட்டம் இருந்ததற்கு அஷ்வின் மற்றும் ரைனாவின் சிறப்பான பந்து வீச்சே காரணம். ரைடர் 58 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தார். அடிதடி ஆட்டத்துக்கு அஞ்சாத ஸ்மித்தைப் பார்க்க பயமாக இருந்தது.

3 ஓவர்களில் 34 ரன்கள் என்ற நிலையில், எனக்கு பாழாப் போன நம்பிக்கை துளிர்த்தது :) ஆனால், ஸ்மித், அந்த முக்கியமான ஓவரில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என்று 12 ரன்கள் சேர்த்தார், கடைசி 2 ஓவர்களில் ஒன்றை மார்க்கலோ, மகேஷோ வீச வேண்டி இருந்ததாலும், ஸ்மித் முகத்தில் தெரிந்த கொலவெறியாலும், என் நம்பிக்கை புஸ்ஸாகியது. அப்புறம் என்னத்தை சொல்ல! ஸ்மித், 19 ஓவரில் 2 பவுண்டரிகளும், மகேஷின் 20வது ஓவரின் முதல் 2 பந்துகளில் 1 பவுண்டரியும், 1 சிக்ஸரும் விளாசியதில், புனே 19.2 ஓவர்களில் ஒரு அப்செட் வெற்றி. அதோடு, தாதா தான் (இன்னும்)ஒரு சிறந்த கேப்டன் தான் என்பதையும் இந்த வெற்றி மூலம் பிரகடனப்படுத்தினார்!

Friday, April 13, 2012

IPL5 CSK vs RCB - சிங்க கர்ஜனையில் சிதறிய ராயல்




இன்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற CSK-RCB ஆட்டத்தின் முதல் இன்னிங்க்ஸை வேலை காரணமாக டிவியில் பார்க்க இயலவில்லை. அதுவும் நல்லதுக்கு தான். கிரிக் இன்ஃபோ தளத்தில் RCB ஸ்கோர் எகிறிக் கொண்டிருந்தது! கெய்லை டம்மியாக்கி விட்டு ஊர் பேர் தெரியாத அகர்வால் சென்னை பந்து வீச்சை விளாசித் தள்ளினார். அவர் அவுட்டானபோது ஸ்கோர் 53 (5.2). அகர்வால் எடுத்தது 45, கெய்ல் 7. அஷ்வின் பந்து வீச்சு இப்படி துவைத்து எடுக்கப்பட்டு பார்த்ததில்லை. 3 ஓவர்களில் 34 ரன்கள் தாரை வார்த்திருந்தார்.

அகர்வால் சென்ற பின், கெய்லுக்கு கொல வெறி பிடித்து, ரெய்னாவின் ஒரு ஓவரில் 21 ரன்கள். 9 ஓவர்களில் 90 ரன்கள் ஒரு விக்கெட் இழப்புக்கு. கோலிக்கும் சீக்கிரம் வெறி பிடிக்கும் சாத்தியக்கூறுகள் தெரிந்தன :) ஒரு வழியாக கெய்லின் பேயாட்டம் ஓய்ந்தபோது ஸ்கோர் 162/2 (16.2). இந்த ரன் மழையிலும், பிரேவோவும் மார்க்கலும் நன்றாகவே பந்து வீசினார். பாலிங்கர் வீசிய கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகள் விழுந்ததில் அந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே. ஒரு 10-12 ரன்கள் காப்பாற்றப் பட்டதாக கொள்ளலாம். பங்களூர் மொத்த ஸ்கோர் 205.

நிச்சயம் சென்னைக்கு தோல்வி என்ற முடிவோடு (அப்ப தான் வழக்கமான நம்ம ரென்ஷன் இல்லாம பார்க்க முடியும்!) டிவி பார்க்க ஆரம்பித்தேன். நிதானமாக தொடங்கிய டுபிளஸ்ஸி ஆட்டம் களை கட்ட ஆரம்பித்தது. உருப்படாத மொ.க முரளி விஜய் மொக்கை போட்டு 11 ரன்களில் அவுட்டானதும் நல்லதுக்கு தான். அடுத்து வந்த சென்னையின் Man for all seasons, ரெய்னா (23 of 14) அவுட்டானபோது ஸ்கோர் 88 (10.3). தோல்வியை எதிர்பார்த்து, ரிலேக்ஸ்டாக ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.

தோனி 2 டவுன் களமிறங்கியது நல்ல மூவ்! தோனி 7-8 "ஹெலிகாப்டர்கள்" விட்டாலொழிய ஜெயிக்க வாய்ப்பே கிடையாது! அருமையாக ஆடி, 46 பந்துகளில் 71 ரன்கள் எடுத்த டுபிளஸ்ஸி 15வது ஓவரில் அவுட்டானபோது RR 14.2. முரளி தனது அற்புதமான ஸ்பெல்லில் 21 ரன்களே கொடுத்து விழுந்த 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது குறிப்பிட வேண்டியது. அந்த சூழலில், வெற்றிக்கு வாய்ப்பு 30% என்று சொல்லும்படி தான் இருந்தது.

தோனியின் “ஹெலிகாப்டர்கள்” சரியாக பறக்காததால், தேவையான ரன்ரேட் ஏறுமுகமாகவே இருந்தது. கடைசி 3 ஓவர்களில் 50 ரன்கள் தேவை (RR 16.66). சென்னை வெற்றி பெறும் என்று எனக்கு எந்த எதிர்பார்ப்பு இல்லாததால், ஒருத்தருக்கும் (அரங்கில் பார்வையாளர்கள், சென்னை அணி) டென்ஷன் இல்லாத மாதிரி நான் உணர்ந்தேன்! அந்த 18வது ஓவரில், சாகீரின் அனுபவம் மிளிர்ந்தது. 7-ஏ ரன்கள் கொடுத்து, ஓவரின் கடைசி பந்தில், தோனியின் கடைசி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினார். இறுதி 2 ஓவர்களில் 43 ரன்கள் தேவை என்ற நிலையில் வெற்றி வாய்ப்பு 10% ஆனது!

உடல் நிலை சரியில்லாத கெய்ல் ஆடுகளத்தில் இல்லை. பத்கல் ஏற்கனவே துவைக்கப்படிருந்த (2 ஓவர்கள், 35 ரன்கள்) காரணத்தால், முக்கியமான 19வது ஓவரை வீச, வெட்டோரி பகுதி நேர பந்து வீச்சாளரான கோலியை அழைத்தது, தூங்கிக் கொண்டிருந்த (மார்க்கல்) சிங்கத்தை வாலைக்கடித்து எழுப்பிய கதையானது! 2 ஓசி பவுண்டரிகள் கிட்டியிருந்தாலும்,
மார்க்கல் அடித்த மற்ற 3 சிக்ஸர்கள் மிக “சுத்தமான” விளாசல்கள்! அந்த 28-ரன் ஓவர் கோபக்கார கோலிக்கு போதி மரம் போல! ஓவரின் முடிவில், “நல்லாத் தானே போயிட்டிருந்தது” வடிவேலுவை கோலி ஞாபகப்படுத்தினார் :) இனி, அடுத்த 5 ஆட்டங்களுக்கு, பந்து வீச கோலிக்கு கை வராது என்று நினைக்கிறேன்! பேட்டிகளில் சற்று லூசுத்தனமாக உளறும் சித்தார்த்த மால்யா சித்தபிரமை பிடித்தது போல அமர்ந்திருந்தது பார்க்க மிக மகிழ்ச்சியாக இருந்தது!

கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை. ஒரு No Ball தவிர்த்து அந்த ஓவரை வினய் (அழுத்தத்திற்கு ஆளாகாமல்) சிறப்பாகவே வீசினார் என்பது என் கருத்து. மார்க்கல் விக்கெட் இழந்தும், முதல் 3 பந்துகளில் 12 ரன்கள்! 4வது ஒரு Dot Ball. 5வதில் ஒரு ரன் மட்டுமே! 6வது edge வாங்கி பவுண்டரிக்கு பறந்ததில், சென்னைக்கு ஐபிஎல் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வெற்றி !!!! இப்படியாக ஆட்டத்தின் 37 ஓவர்களில் (பாலிங்கர் வீசிய கடைசி ஓவரையும், சென்னை பேட் செய்த கடைசி 2 ஓவர்களையும் தவிர்த்து) பின் தங்கியிருந்த சென்னை அணி ஓர் அசாதாரண வெற்றியைப் பெற்றது.

எ.அ.பாலா

Wednesday, April 11, 2012

IPL5 - மும்பை இந்தியன்ஸ் என்னும் ”தீவிரவாத” அணி


இது மும்பையின் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்துக்காக வைக்கப்பட்ட தலைப்பு அல்ல !!!




9th APR நடந்த மும்பை-டெக்கான் சார்ஜர்ஸ் ஐபிஎல் ஆட்டம் மிக மிக விறுவிறுப்பாக இருந்தது. ஐபிஎல்-5 இன் முதல் nail biter ஆட்டம் என்று தாராளமாக கூறலாம். முதலில் பேட் செய்த டெக்கான் அணி, சங்ககாரா விக்கெட் இழக்கும் வரை நல்ல நிலையில் தான் இருந்தது, 82-3 (12.3 ஓவர்கள்). சங்ககாரா அவுட் என்று அறிவிக்கப்படுவதற்கு முன் மும்பை அணி செய்த ரவுடித்தனத்தை இதற்கு முன் நான் பார்த்ததில்லை! சங்ககாரா அவுட் இல்லை என்று 2 கள அம்பயர்களும் முடிவு செய்தபிறகு, முனஃப் படேலும், திமிர் பிடித்த, கேப்டன் ஆகியும் திருந்தாத ஜென்மமான, ஹர்பஜனும், நம்ம ஊர் ரவுடி தினேஷ் கார்த்திக்கும், இன்னும் ஓரிரு மும்பை ஆட்டக்காரர்களும், அம்பயரை சூழ்ந்து கொண்டு பொறுக்கித்தனம் செய்ததில், மிரண்டு போன அம்பயர், தனது முடிவை, மூன்றாம் அம்பயருக்கு refer செய்யும் கட்டாயத்துக்கு ஆளானார்.

ஒரு விஷயத்தை 3-ஆம் அம்பயரிடம் refer செய்வதோ, செய்யாமல் இருப்பதோ, கள அம்பயர்களின் உரிமை என்பதை திமிர் பிடித்த முட்டாள் ஹர்பஜனும் அவனது மும்பை அணி ரவுடி கூட்டாளிகளும் புரிந்து கொள்ள வேண்டும்! ஹர்பஜனை கேப்டனாக நியமித்ததில், இனி மும்பை அணியில் இருக்கும் நல்ல குணமுள்ள வீரர்கள் கூட உருப்படாமல் போவதற்கு வாய்ப்பு மிக அதிகம். இந்த எல்லா கூத்தையும், தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல, ஒரு சோஃபா முழுவதையும் தான் மட்டுமே ஆக்ரமித்து கொண்டு அமர்ந்திருந்த அம்பானியின் மகன், எந்த உணர்ச்சியும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தது இன்னொரு ஹைலைட் :-)


சரி மேட்சுக்கு வருவோம்! டெக்கான் 150-ஐ தாண்டும் என்று நினைத்தேன். ஆனால், இறுதி ஓவர்களில் மும்பை நன்றாக பந்து வீசியதில் அல்லது டெக்கானின் லோயர் ஆர்டர் சொதப்பியதில், டெக்கான் 138 ரன்களே எடுத்தது. பேட் செய்ய களமிறங்கிய மும்பை, அங்கிட் சர்மா (சுழல் பந்து வீச்சு) மற்றும் டேல் ஸ்டெயினின் பந்து வீச்சில் பயங்கரமாகத் தடுமாறியது. ஸ்டெயின் தான் ஏன் உலகின் மிகச் சிறந்த பந்து வீச்சாளர் என்பதை இன்னிங்க்ஸின் 4வது ஓவரில் நிரூபித்தார்!! It was easily the best over of IPL-5 (according to me, of all IPLs!). லெவியை செட்டப் பண்ணி அல்லது ”பதப்படுத்தி”, அந்த அருமையான ஓவரின் கடைசிப்பந்தில், ஒரு 150 கிமீ யார்க்கர் வாயிலாக லெவியின் நடு ஸ்டம்பை தகர்த்தார் ஸ்டெயின். 5 ஓவர்களில் மும்பை 15-2.

120 கிமீ வேகத்தில் பந்து வீசி, முனஃப் படேல் போன்ற கவைக்குதவாதவர்கள் எல்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தும்போது, ஸ்டெயின் போன்ற அற்புதமான பந்து வீச்சாளர்கள் பரிமளிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை, அவர்கள் பரிமளித்தால் தான் கிரிக்கெட்டுக்கும் சிறப்பு! ராயுடுவும், ரோஹித்தும் தாக்கு பிடித்து, ஸ்கோரை 11.2 ஓவர்களில் 58க்கு இட்டு வந்தனர். ராயுடு அவுட்! கடைசி 3.4 ஓவர்களில் (போலார்ட் அவுட்டானபோது) மும்பைக்கு தேவை 44 ரன்கள்.

ஸ்டெயினுக்கு ஒரு ஓவர் இருந்த சூழலில், நிச்சயம் டெக்கான் ஜெயிக்கும் என்று தோன்றியது. ஸ்டெயின் வீசிய 19வது ஓவரும் ஒரு ஜெம், 5 ரன்கள் தந்து கார்த்திக்கையும் வீட்டுக்கு அனுப்பினார். கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில், டேன் கிரிஸ்டியனின் மிக மிக மோசமான பந்து வீச்சால் (மட்டுமே!) மும்பை ஜெயித்தது! அவரது மூஞ்சியில் அல்லது முகரைக்கட்டையில் (உதட்டை சுழித்து பண்ணிய கோணங்கித்தனத்தில்) அப்பட்டமாக பிரஷர் தெரிந்தது! He did not look international class yesterday! He bowled that last over so pathetically! மேலும், ஓவரின் 5-வது பந்தில் ரோஹித் ரன் அவுட் (அவரது மட்டை தரையில் இல்லை) என்பது என் கருத்து. அந்த ஓவரில் ரோஹித் பெரிதாக கிழித்ததாகக் கூற எதுவுமில்லை. அதற்காக அவரது நேற்றைய ஆட்டமே தண்டம் என்று கூறுவதாகவும் எண்ண வேண்டியதில்லை!

ரோஹித் இது போலவே, இந்தியாவுக்கு ஆடும்போதும் விளையாடி ஜெயித்துக் கொடுத்தால், அவருக்கு புண்ணியமாகப் போகும் !

எ.அ.பாலா

Sunday, April 03, 2011

உலகக்கோப்பை Finals - உச்சம் தொட்ட இந்தியா


முதல் முறை டாஸ் செய்தபோது ஏற்பட்ட குழப்பத்தால், மீண்டும் செய்த டாஸில் சங்கக்காரா வென்று, பேட்டிங்கை தேர்வு செய்தார்! இந்திய மீடியா சங்கக்காரா ஏமாற்றியது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்த பெருமுயற்சி எடுத்தது ! எதிர்பார்த்தது போல, நெஹ்ராவுக்கு பதில் அணியில் இடம் பெற்ற ஸ்ரீசாந்த் மோசமாக பந்து வீசினார். பெரிய இடைவெளிக்குப் பின் திடீரென்று ஒரு முக்கிய ஆட்டத்தில் ஆட நேர்ந்தால் இப்படி ஆகலாம் என்பதும் எதிர்பார்த்தது தான்! சாகீரின் நிபுணத்துவம் (அவரது முதல் 3 ஓவர்களும் மெய்டன்கள்!) முதல் 10 ஓவர்களில், இலங்கை பேட்டிங்கை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தரங்காவின் விக்கெட்டையும் சாகீர் வீழ்த்தினார், 31/1. இந்த உலகக்கோப்பையில் முதல் பவர் பிளேயில் இலங்கை எடுத்த மிகக் குறைவான ரன்கள் இது.

The initial phase belonged to India. இலங்கை துவக்க ஆட்டக்காரர்களை இழந்து 18 ஓவர்களில், தத்தி தத்தி 65 ரன்களை எடுத்திருந்தது. தங்கள் மிடில் ஆர்டர் அத்தனை பலமானதில்லை என்பதை உணர்ந்து, சங்கக்காராவும், ஜெயவர்த்தனேயும் கவனமாக ஆடினாலும், ரன்கள் steady-ஆக வந்த வண்ணமிருந்தன. யுவராஜ் பந்துவீச்சில் சங்கக்காரா விக்கெட் இழந்தபின் (122/3, 28 ஓவர்கள்) மஹிளா தனது அனைத்து அனுபவத்தையும் ஆட்டத்தில் கொணர்ந்து ஆடியது தான் இலங்கை இன்னிங்க்ஸின் ஹைலைட்! அவரது touch play மற்றும் பந்தை ஃபீல்டர்களுக்கு நடுவே நுணுக்கமாக செலுத்தும் திறன் ஆகியவை அவர் ஒரு world class batsman என்பதை நிரூபித்தன.

நடு ஓவர்களில் ஹர்பஜன், முனாஃப், யுவராஜ் ஓரளவு சிறப்பாக பந்து வீசியதால், 45 ஓவர்கள் முடிந்தபோது, ஸ்கோர் 211/5. யுவராஜ், சாகீர் தலா 2 விக்கெட்டுகள், ஹர்பஜன் 1. இந்த உலகக்கோப்பையில், முதன்முதலாக சாகீரின் "death-overs" பந்து வீச்சு மிக மோசமானதாக அமைந்து விட்டது நமது துரதிருஷ்டம் என்று தான் கூற வேண்டும். Length ball, full toss என்று வீசியதில், மட்டையை சரியாக பிடிக்கத் தெரியாத குலசேகரா, ஃபெரெரா போன்றவர்கள் விளாசியதில் 5 BPP ஓவர்களில் (46-50) 63 ரன்கள் கிட்டின! யாருமே எதிர்பார்க்காதது இது! மஹிளா 48வது ஓவரில் சந்தடியில்லாமல், தனது சதத்தை எட்டினார்.

இலங்கையின் மொத்த ஸ்கோர் 274. தனது முதல் 7 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே தந்த சாகீர், அவரது இறுதி 3 ஓவர்களில் 44 ரன்கள் வாரி வழங்கியதை Absolute Shocker என்று தான் கூற வேண்டும்!! ஆடுகள நிலைமை பெரிய அளவில் மாறாத சூழலில், 275 என்பது நமது பேட்டிங்கை கொண்டு துரத்தவல்ல இலக்காகவே தோன்றியது. மிதமான பயமும், ரென்ஷனும் வயிற்றைக் கவ்வியிருந்ததென்னவோ உண்மை தான் :-)

இந்தியா பேட்டிங்:
உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு இறுதியாட்டத்தில் எந்த அணியும் வெற்றிகரமாக துரத்தாத ஓர் இலக்கை அடைய ஒரு நல்ல துவக்கம் மிக அவசியமானது என்ற எண்ணம் பலருக்கும் இருந்திருக்கும். சச்சின், சேவாக் இருவரில் ஒருவர் ஒரு 'பெரிய' நூறு எடுத்தால் மட்டுமே இது சாத்தியம் என்று டிவிட்டரில் நானே பதிவு செய்திருந்தேன்! ஆனால், இன்னிங்ஸின் முதல் மலிங்கா ஓவரில், சேவாக் எல்.பி.டபிள்யு :(

சேவாக் ஒரு 3-4 ஓவர்களுக்குப் பிறகு (அதான், முதல் பவர் பிளேயில் 10 ஓவர்கள் இருக்கின்றனவே!) shuffle across செய்து leg side-ல் பவுண்டரி அடிக்க முயல்வது நல்லது, அல்லது, inside out ஷாட் கூட ஆடுவது இதற்கு பரவாயில்லை! சச்சின் குலசேகரா ஓவரில் 2 பவுண்டரிகள் effortless ஆக அடித்தது நம்பிக்கையைத் தந்தாலும் மலிங்காவின் பந்து வீச்சில் 7வது ஓவரில் சங்கக்காராவுக்கு கேட்ச் கொடுத்து விக்கெட்டிழந்தார் :( அரங்கை மயான அமைதி கவ்வியது, உண்மையில் எனக்கும் நம்பிக்கை போய் விட்டது! ஸ்கோர் 32/2

ரென்ஷன் சற்று அதிகமாக இருந்ததால், பக்கத்துத் தெருவில் இருக்கும் நண்பர் வீட்டுக்குச் சென்றேன் (நண்பர் பெயர் பிள்ளையார்!) அர்ச்சகரும் கிரிக்கெட் ஆர்வலர். 2 விக்கெட்டுகள் காலி என்று நான் கூறியவுடன், துளியும் நம்பிக்கை இழக்காமல், "சச்சின், சேவாக் மட்டும் தான் இந்திய அணியா? இன்னிக்கு கம்பீர் 100 அடிப்பார். கோலியும், தோனியும் கூட நிச்சயம் அசத்துவார்கள், வெற்றி உறுதி, நாளைக்கு வந்து சொல்லுங்க!!!" என்று அசால்டாக கூறினார். அவர் சொன்னது போலவே, கௌதியும், கோலியும் பெரிய அளவிலான அழுத்தத்தை உள் வாங்கிக் கொண்டு அற்புதமாக ஆடினர் என்றால் அது மிகையில்லை. அதே நேரம், ரன்கள் எடுத்த வண்ணம் இருந்ததால், ரன் ரேட் 5.5 க்கு குறையவில்லை.

மீண்டும் ஒரு திடுக் திருப்பம். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கோலி, தில்ஷனின் படு சுமாரான பந்து வீச்சுக்கு அவுட்டானார். ஸ்கோர் 115/3 (22 ஓவர்கள்). யுவராஜுக்கு பதில், 'கப்தான்' தோனி களமிறங்கினார்! முரளி, ரந்திவ், தில்ஷன் என்று 3 off spinners இலங்கை அணியில் இருந்ததால், இடது கை ஆட்டக்காரர் யுவராஜை (மற்றும் ரெய்னாவை) துரத்தலின் இறுதிக்கட்டத்துக்கு வைத்திருப்பது நல்லது என்று தோனி கருதியிருக்கலாம். மேலும், இடது-வலது பேட்டிங் காம்பினேஷன் களத்தில் ஆடுவதும் நல்லது தானே! Dhoni mentioned later that he wanted to take responsibility in that crunch situation and guide the team closer towards the target.

ஃபார்மில் இல்லாத காரணத்தால், தொடக்கத்தில் தோனியின் ஆட்டத்தில் மிகுந்த கவனம் தெரிந்தது. ஆனால், கம்பீர் ஆடிய விதம் கேப்டனுக்கு நிச்சயம் நம்பிக்கை அளித்திருக்க வேண்டும். 1-டவுனில் கம்பீர் ஆடுவது இந்திய அணிக்கு ஒரு வரப்பிரசாதம்! சுழற்பந்து/வேகப்பந்து என்று இரண்டையும் சுலபமாக கையாள்வதுடன், ரிஸ்க் அதிகம் எடுக்காமல், ரன் சேர்ப்பதில் தேக்கமும் இல்லாமல் பார்த்துக் கொள்வது கம்பீரின் Speciality! சங்கக்காராவின் பந்துவீச்சு மாற்றங்கள் பலன் எதுவும் தரவில்லை. இதற்கு முரளி (உடல் நிலை காரணமாக) off colour ஆக இருந்ததும் ஒரு முக்கியக் காரணம். கம்பீரும் தோனியும் முரளியில் tricksக்கு ஒத்துழைப்பு தர மறுத்து கவனமாக ஆடியதும் மற்றொரு காரனம் :-) அஜந்தா மென்டிஸ் இல்லாததும் ஒரு குறையே.

முக்கியமான ஆட்டத்தில், உலகக்கோப்பையில் தனது முதல் அரைச்சதத்தை (52 பந்துகள்) தோனி பதிவு செய்தார். ஃபார்மில் இல்லாத நிலையில், playing under great pressure, ஆடுகளம் பேட்டிங்குக்கு அத்தனை கடினமாக இல்லாவிட்டாலும் கூட, தோனியின் இந்த ஆட்டம் மிக்க பாராட்டுக்குரியது! அதற்காக, முந்தைய ஆட்டங்களில் தோனி செய்த சில சொதப்பல்களை நான் விமர்சித்தது, தேசியத்துக்கு எதிரான குற்றம் என்று ஒரு சில தோனி ரசிகர் மன்ற pseudo-patriotic தொண்டரடிப்பொடிகள் பொங்கினால், நான் என்ன செய்ய! தோனியே கூட பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தான் ஆடுகளத்தை சரியாக கணிக்கத் தவறியதை ஒரு பேட்டியில் கூறியிருந்ததை நினைவு கூர்கிறேன்.

ஒரு Gem of an innings ஆடிய கௌதி வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமைந்திருக்க வல்ல சதத்தை தவறவிட்டது வருத்தத்தைத் தந்தது. 97 ரன்களில், அதுவும் ஃபெரெராவின் உருப்படாத பந்துவீச்சில், அடிக்கப் போய், அனாவசியமாக ஆட்டமிழந்தார்! Gambir actually deserved that glory for the calmness he displayed under pressure & the way he anchored the Indian innings in a make or break situation after the cheap dismissal of both Sachin and Sehwag! யுவராஜ் களமிறங்கினார்.

இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை. கடைசி 5 (பவர் பிளே) ஓவர்களில் இந்திய வெற்றிக்கு 30 ரன்களே தேவை என்ற நிலையில், தோனியின் அதிரடித் தாக்குதலில் 48.2 ஓவர்களிலேயே ஒரு சிக்ஸர் வாயிலாக, மகத்தானதொரு வெற்றியும், 28 வருட காத்திருப்புக்குப் பின் உலகக்கோப்பையும் இந்தியாவின் வசம் வந்தது!!!! தோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து, தனது பணியை செவ்வனே செய்து முடித்தது குறிப்பிட வேண்டிய ஒன்று. It was good that Dhoni finished the job himself without expecting others below to achieve the victory. இந்த வெற்றியின் மூலம், கபில்தேவின் தனிமையும் விலகியது :) இந்தியாவே விழாக் கோலம் பூண்டது! எனது தெருவில் ஒரு 10 நிமிடங்களுக்கு இடைவிடாத வேட்டுச்சத்தம்!

சச்சின் இந்த வெற்றியை தனது வாழ்வின் மிக மகிழ்ச்சியான/பெருமையான தருணம் என்று கூறியதில் எந்த ஆச்சரியமும் இல்லை! 20 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின் 6வது முயற்சியில் கிடைத்த பொக்கிஷமல்லவா இந்த உலகக்கோப்பை! ஆட்ட நாயகன் தோனி, அந்த விருதை கம்பீருடன் பகிர்ந்து கொள்வதாக அறிவிப்பார் என்று எதிர்பார்த்தேன்! இதை ஒரு குறையாக கூறவில்லை. யுவராஜ் உலகக்கோப்பைத் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். ஒரு சமயத்தில், இந்திய அணியிலிருந்த விலக்கப்பட்டு, (முக்கியமாக) உலகக்கோப்பைக்காக அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்ட யுவராஜுக்கு இதை விட என்ன பெருமை இருக்க முடியும்!!!

Tail piece:
இந்தியாவுடன் கம்பேர் செய்தால், ஸ்ரீலங்கா அணியில் சங்கக்காரா, மஹிளா, முரளி, மலிங்கா தவிர்த்து மற்றவர் ஒப்புக்குச் சப்பாணிகள் என்பதால் தான், அதை சுமாரான அணி என்று முன்னர் எழுதினேன். இவர்கள் நால்வரிடமும் இந்தியா உஷாராக இருப்பது அவசியம் என்றும் முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்! அது போலவே, முரளி தவிர மற்ற மூவரும் பரிமளித்ததால் தான், இந்த இறுதி ஆட்டம் மிக சுவாரசியமான ஒன்றாக அமைந்தது!

இந்த உலகக்கோப்பை கனவு நனவானதற்கு, இந்திய அணியின் (துளியும் ஆர்ப்பாட்டம் இல்லாத!) பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனின் அபாரமான பங்களிப்பு ஒரு முக்கியக் காரணம்! 2007 உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறிய இந்திய அணியை அரவணைத்து, பல கஷ்டங்களை சமாளித்து, திட்டங்களை வகுத்து, இந்த உலகக்கோப்பை உச்சத்தை அடைய (அப்பாடா, இடுகை தலைப்பு இடுகையில் வந்தாச்சு ;)) அடி கோலிய இவரை Gary Potter என்று அழைக்கலாம் :-)

In the final conclusion, both MS Dhoni and SR Tendulkar are Destiny's Children and realization of this World Cup Dream is just testimony to that ever lasting fact !!!

Passing Shot:
சூப்பர் ஸ்டார் (அரங்கில்) பார்வையாளராக இருந்த ஓர் ஆட்டத்தில் இந்தியா தோற்றுப் போகும் என்பது கூட கனவிலும் நடக்க முடியாத ஒரு விஷயம் தானே ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா

http://balaji_ammu.blogspot.com

Saturday, April 02, 2011

India vs Pakistan - மொஹாலி மஹாயுத்தம்



ஒரு உலகக்கோப்பை இறுதியாட்டத்துக்கு உண்டான எல்லா அம்சங்களும் கொண்டதாக (ஸ்ரீலங்கா ஆடிய உலகமகா மொக்கை காலிறுதி, அரையிறுதி ஆட்டங்கள் போல அல்லாமல்) இந்தியா-பாக் அரையிறுதி ஆட்டம் இருந்தது என்றால் அது மிகையில்லை! இந்த ஆட்டத்திற்கு முன்னால் இந்திய மீடியா அரங்கேற்றிய கூத்துகள் சுவாரசியமாக இருந்தன. ஆட்டத்தைப் பார்க்க இந்தியப் பிரதமர், பாக் பிரதமர் கிலானியை அழைத்திருந்தது கண்டு, பால் தாக்கரே அஜ்மல் கசாபையும் அழைக்க வேண்டியது தானே என்று சாம்னாவில் காய்ச்சியிருந்தார் :) இந்திய அரசின் இந்த கிரிக்கெட் diplomacy-யால் ஒரு எழவு பயனும் இருக்காது என்பது நிதர்சனமான ஒன்று தான்!

சமபலம் வாய்ந்த இரு அணிகள் சந்தித்த ஆட்டம் என்று சொல்லலாம். இந்தியாவின் பேட்டிங் வலிமையை compensate செய்யும் வகையில் பாக் அணியின் பந்துவீச்சு திறமையான ஒன்று என்பதால் தான் சமபலம் என்கிறேன். அஷ்வினுக்கு பதிலாக, சற்றே நம்பிக்கை தளர்ந்த நிலையில் இருக்கும் நெஹ்ராவை தேர்வு செய்திருந்தது, ரிஸ்க்கானது என்று டிவிட்டரில் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னமே அபஸ்வரம் கேட்க ஆரம்பித்து விட்டது ;) தோனியின் பக்கம் அதிர்ஷ்டமிருந்தது, டாஸில் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

3வது ஓவரில் சேவாக் புயல் மொஹாலியைத் தாக்கியதில், உமர் குல் காணாமல் போனார் :) 5 பவுண்டரிகளும் tracer bullets! ஆனால், புயல் அதிகச் சேதத்தை ஏற்படுத்தாமல், வீரியம் இழந்தது! ஸ்கோர் 49/1 (6 ஓவர்கள்). விக்கெட் எடுத்தது, சின்னப்பையன் வஹாப் ரியாஸ். சச்சின் தனது இயல்பான ஆட்டத்தைத் தொடர்ந்தாலும்,for a change, தன் விக்கெட்டை இழப்பதற்கு கடுமையாக போராடியும் (இதுவரை 2 lifes, 2 referrals) பாக் ஃபீல்டர்கள் ஒத்துழைக்கவில்லை :) கம்பீர் விக்கெட் இழந்தபோது ஸ்கோர் 116/2 (19 ஓவர்கள், RRR 6.10). வடிவேலு பாஷையில், எல்லாம் நல்லாவே போய்க்கிட்டு இருந்தது ;-)

22வது ஓவரில், சச்சினின் அரைச்சதம். வஹாப் வீசிய 26வது ஓவரில் double strike, கோலியும், யுவராஜும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்! யுவராஜுக்கு வீசப்பட்ட முதல் பந்து வேகமாக வீசப்பட்ட scorching inswinging yorker! ஸ்கோர் 145/4 (26 ஓவர்கள்). திருவாளர் தோனி ஃபார்மில் இல்லாத நிலையில், ஒரு fighting total (250+) வர வேண்டுமே என்று மிதமான ரென்ஷன் :) சச்சின் களத்தில் இருந்த நம்பிக்கையில், தோனி தன் விக்கெட்டை தக்க வைத்துக் கொள்ள தடவித் தடவி ஆடியது பார்க்க பரிதாபமாய் இருந்தது!

Sachin continued to live a charmed existence at the crease with 2 more dropped catches! ஒரு வழியாக, 85 ரன்கள் எடுத்த நிலையில், சச்சின் அதிர்ஷ்டம் காலாவதியாகி அஜ்மல் பந்தில் அவுட்! ஸ்கோர் 187/5 (37 ஓவர்கள், RRR 5.05). 6.10 என்றிருந்த ரன்ரேட்டை 5.05க்கு இட்டு வந்த பாக் பந்து வீச்சு பாராட்டுக்குரியது! ஃபீல்டிங் சொதப்பாமல் இருந்திருந்தால், இந்தியாவின் நிலைமை இதை விட மோசமாக போயிருக்கும்.

எனக்குப் பிடித்த ரெய்னா களமிறங்கினார். நம்பிக்கை தரும் வகையில் நிதானமாக ஆட ஆரம்பித்தார். பாக் தரப்பில் வஹாப் அபாரமாக பந்து வீசினார். அதோடு, அஃப்ரிடியும், அஜ்மலும் பந்து வீசியதிலிருந்து, ஆடுகளம் மெல்ல சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஒன்றாக மாறி வருவது கண்டு, அஷ்வினை அணியில் சேர்க்காதது தவறான முடிவாகவே தோன்றியது! 40 ஓவர்களில் ஸ்கோர் 200/5. தோனி ஃபார்மில் இல்லாவிட்டாலும், BPP எடுக்கப்படாத சூழலில், 275 என்பது எட்டக்கூடிய இலக்காகவே தோன்றியது.

42வது ஓவரில் தோனியின் சிரமங்களுக்கு விடிவு பிறந்தது :) ஹர்பஜன் வேகமாக வந்தார், ஆனால் ரன்கள் வேகமாக வரவில்லை! 45வது ஓவரில் பேட்டிங் பவர் ப்ளே எடுக்கப்பட்டது. உமர் குல் மீண்டும் அடித்துத் துவைக்கப்பட்டதில், 46வது ஓவரில் 14 ரன்கள்! பவர் ப்ளே ஓவர்களில் இந்தியா எடுத்தது 43 ரன்கள். இந்தியாவின் மொத்தம் 260 ரன்கள். ரெய்னா (36 ரன்கள், 39 பந்துகள்) கடைசி வரை இல்லாமல் இருந்திருந்தால் 240 கூட தேறியிருக்காது. Raina's contribution was vital in the end.

பாக் இன்னிங்க்ஸ்: கம்ரானும், ஹஃபீஸும் களமிறங்கினர். 9வது ஓவரில், சாகீர் வீசிய மெதுவான பந்தில் ஏமாந்து கம்ரான் விக்கெட் இழந்தார். 16வது ஓவரில் ஹஃபீஸ் முனாஃப் பந்தில் காலி! ஸ்கோர் 72/2. யூனிஸ் கான் வந்தார். தோனியை விட பயங்கரமாக தடவினார் :) பலர் வாயில் விழுந்து புறப்பட்ட நெஹ்ரா சிறப்பாக பந்து வீசியது குறிப்பிட வேண்டியது, 5-0-19-0.

தங்ககரத்தின் சொந்தக்காரர் யுவராஜ் ஷஃபீக்கை வீழ்த்தினார்! 24 ஓவர்கள், ஸ்கோர் 103/3, தேவையான ரன்ரேட் 6-ஐத் தொட்டது! In the 26th over, Yuvi ended the Younis Khan's miserable tenure (13 off 32 balls) at the crease :) யுவராஜ் 4-1-9-2 !!!! மற்றொரு பக்கத்தில், ஹர்பஜனும் நன்றாகவே பந்து வீசிக் கொண்டிருந்தார். 7-0-31-0

30வது ஓவரில், "தானத்தில் சிறந்தது நிதானம்" என்பதை விடுத்து, உமர் அக்மல் யுவராஜை target பண்ணி, ஒரு சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து, 'The game is ON' என்று அறிவித்தார்! அதற்கு நேர்மாறாக, மிஸ்பா உருப்படியில்லாமல் ஆடிக் கொண்டிருந்தார். 34வது ஹர்பஜன் ஓவர் ஒரு turning point, உமர் அக்மலின் ஸ்டம்ப் பஜ்ஜியின் தூஸ்ராவில் சிதறியது. இந்தியாவின் பந்து வீச்சும் மேம்பட்டுக் கொண்டே இருந்தது, முனாஃப் 8-1-29-1 ஹர்பஜன் 8-0-33-1. 36வது ஓவரில் ரன்ரேட் 8-ஐத் தொட்டது, ஸ்கோர் 148/5.

ஆடுகளம் பேட்டிங்குக்கு சிரமம் மிக்க ஒன்றாகவே இருந்தும், அஃப்ரிடி இன்னும் களமிறங்காத நிலையில், India cannot & should not relax என்பது தெளிவாக புரிந்தது. அப்துல் ரஸாக் ரொம்ப நேரம் தாக்கு பிடிக்கவில்லை, முனாஃபுக்கு இன்னொரு விக்கெட், 9-1-33-2. அஃப்ரிடி களமிறங்கிய பின் ஆட்டம் மிக லேசாக சூடு பிடித்தது. தோனியின் ஃபீல்டிங் அமைப்பும், பந்து வீச்சு மாற்றங்களும் மிக சிறப்பாக இருந்ததால், பாக் அணியின் மீது அழுத்தம் துளியும் குறையாமல் இருந்தது.

The game was effectively in India's hands when Afridi lost his wicket to Harbajan in the 42nd over! ஸ்கோர் 184/7. தேவையான ரன்ரேட் 9.62. மீண்டும் பந்து வீச வந்த நெஹ்ரா, தோனி அவர் மீது வைத்த நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படாத வண்ணம், 2 விக்கெட்டுகளை கைப்பற்றி, தனது 10 ஓவர்களை பூர்த்தி செய்தார், 10-0-33-2. பந்து வீசிய ஐவரில், நெஹ்ராவின் பந்து வீச்சு தான் most economical என்பதை பதிவு செய்கிறேன்! அதே சமயம், எனது முந்தைய பதிவில், நெஹ்ராவை இந்த ஆட்டத்துக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று நான் பரிந்துரைத்ததையும் பதிவு செய்து என் காலரை சற்றே தூக்கி விட்டுக் கொள்கிறேன் :-)

பேட்டிங் பவர் பிளேயில், மிஸ்பா மட்டையை பொழுதுபோக்காக சுழற்றியதில், ஒரு சில பவுண்டரிகள் வந்தும், பாக் 49.5 ஓவர்களில் 231-க்கு ஆட்டமிழந்தது. இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை T-20 இறுதியாட்டம் போலவே, மிஸ்பாவுக்கு இது இன்னொரு "மிஸ்" பா :) இந்தியா 3வது முறையாக உலகக்கோப்பை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது! ஸ்ரீலங்கா சுமாரான அணிகளை வென்று இறுதிக்கு தகுதி பெற்றிருந்தாலும், அவ்வணியில் சங்கக்காரா, ஜெயவர்த்தனே, முரளி, மலிங்கா ஆகிய நால்வரிடம் இந்தியா உஷாராக இருப்பது அவசியம் என்று நினைக்கிறேன்!

என்றென்றும் அன்புடன்
பாலா
( படம் : நன்றி தினமலர் )

Wednesday, March 30, 2011

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் -ஒரு முன்னோட்டம்

நாளை நடைபெறவிருக்கும் இந்தியா-பாக் செமிஃபைனல் ஆட்டம் பயங்கர பரபரப்பை எல்லா தளங்களிலும் ஏற்படுத்தியுள்ளது!. மீடியா இதை மூன்றாம் உலகபோருக்கு ஒரு curtain raiser அளவுக்கு ஏற்றி விட்டிருப்பது மகா கொடுமை. அது போல, பிரதமரே இந்த ஆட்டத்துக்கு வர இருப்பதால், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், காசு கொடுத்து டிக்கட் வாங்கிய பொது மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கப் போகிறது!! இது போதாதென்று, இந்தியப்பிரதமர் பாக் பிரதமரையும், ஜனாதிபதியையும் வேறு வெத்தலை பாக்கு வைத்து அழைத்திருக்கிறார்! ஒரு பேட்டியில், சஷி தரூர் கிரிக்கெட்டை மட்டும் கிரிக்கெட்டர்கள் பார்த்துக் கொண்டால் போதும், இந்திய-பாக் பிரச்சினைகளை (இரு நாட்டு பிரதமர்கள்) Statesmen கவனித்துக் கொள்வார்கள் என்றார்! சஷி statesmen என்றால் "மாநில மனிதர்கள்" என்று அர்த்தப்படுத்திக் கொண்டாரோ என்னவோ !?!

இன்னும் சில முக்கிய அரசியல்வாதிகளும் மொஹாலிக்கு செல்லவிருக்கிறார்கள். இவர்கள் டிவியில் ஆட்டத்தை பார்த்துத் தொலைத்தால் என்ன? இவர்கள் பயணத்துக்கும், பாதுகாப்புக்கும் மக்கள் பணம் கோடிகளில் விரயமாவதை தவிர்க்கலாமே! இது போன்ற சின்ன விஷயங்களை யோசித்துப் பார்த்து செயல்படக் கூட ஏன் அரசியல்வாதிகளுக்குத் தோன்றுவதில்லை? :-( இவர்களும் தத்துபித்து மீடியாவும் ஏன் எல்லாவற்றிலும் அரசியலை நுழைத்து நாறடிக்க வேண்டும்???

பாக் உள்துறை அமைச்சர், பாக் அணியை fixing-ல் ஈடுபடவேண்டாம் என்று எச்சரித்திருப்பதில் தவறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. பாக் அணியின் fixing வரலாறு அத்தகையது! பாக் அணியினரை சத்திய சந்தர்களாக எண்ணிக் கொண்டு இம்ரான் கான் அமைச்சருக்கு எதிராக பொங்குவது சற்று அதீதமாகப் பட்டது! சரி, மேட்டருக்கு வருவோம்.

மொஹாலி ஆடுகளம் வேகத்துக்கும், bounceக்கும் சாதகமான ஒன்றாகவே இருந்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்றே. அதோடு, ஆடுகளத்தின் கெட்டியான களிமண் காரணமாக பந்து அவ்வளவாக சுழலாது, skid ஆகும் அபாயம் உள்ளது! அதனால், அக்தர், உமர் குல், அஃப்ரிடி ஆகியோரைக் கொண்ட பாக் அணி பந்து வீச்சுக்கு இது சற்று அனுகூலமாக அமையும் என்றாலும், நமது ஜாம்பவான் மட்டையாளர்கள் அதை திறமையாக எதிர் கொள்வார்கள் என்று நம்பலாம் :) நமது தரப்பில், சாகீரும், அஷ்வினும் இந்த ஆடுகளத்தில் நிச்சயம் பரிமளிப்பார்கள்.

மொஹாலியில் இதற்கு முன் நடந்த 9 ஆட்டங்களில் 2 முறை தான் 300+ ஸ்கோர்கள் சாத்தியமாகியிருக்கிறது. டாஸில் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும், இந்தியா டாஸில் வென்று, முதல் மூவரில் ஒருவர் சதமும், மிடில் ஆர்டரில் ஒருவர் அரைச்சதமும் எடுத்தால், 300-ஐ சுலபமாக எட்டி விடலாம்! 280 என்பது ஒரு competitive இலக்காக இருக்கும் என்றும் எண்ணுகிறேன். மாலை நேரப்பனி புல்லின் மேல் தங்கும் காரணத்தால், 2வதாக பந்து வீசும் அணிக்கு ஈரம் காரணமாக பந்தை கிரிப் செய்வது சற்று கடினமாக இருக்கும். காற்று அதிகம் வீசினால், அவ்வளவு பிரச்சினை இருக்காது. மைதானத்தில் புல்லை குட்டையாக வெட்டியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது!

முனாஃபுக்கு பதிலாக, நெஹ்ராவை சேர்ப்பது அத்தனை மோசமான ஒரு தேர்வாகத் தோன்றவில்லை. சச்சினின் 100வது international சதம் நாளை நிகழ்ந்தால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள்! ஆனால், இந்தியா வெல்வது அதை விட முக்கியமானது என்பதால், அந்த நூறு பின்னாளில் காலம் தாழ்ந்து நிகழ்ந்தாலும் பிரச்சினையில்லை :)

Tail piece: Based on the performance, இந்திய அணியை விமர்சித்து எழுதுவதால், இந்தியா தோற்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு எழுதுவதாக அர்த்தமாகாது. அந்த விமர்சனத்துக்கு எதிராக கருத்துகளை முன் வைப்பதை விடுத்து, "மேரா பாரத் மஹான்", "ஸாரே ஜஹான்ஸே அச்சா" என்று பாய்ந்து பிறாண்டுவதால் யாருக்கும் பயனில்லை!

எனக்குப் பிடிக்காத ஸ்ரீலங்கா அணி செமி ஃபைனலில் வென்றிருப்பதால், அந்த ஆட்டம் குறித்து எழுத ஆர்வம் இல்லை! ஸ்ரீலங்காவுக்கு அதிர்ஷ்டம் அதிகம், எந்த ஒரு பலமான அணியையும் வெல்லாமல், ஃபைனல்ஸுக்கு தகுதி பெற்று விட்டார்கள். கென்யா, கனடா, ஜிம்பாப்வே என்று 3 மகா மொக்கை அணிகளையும், ஒரு நாள் போட்டிக்கு லாயக்கில்லாத ஒரு ஆடுகளத்தை அமைத்து, அதே ஆடுகளத்தில், சுழற்பந்து வீச்சுக்கு தடுமாறும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளையும் (முறையே கால் இறுதியிலும், அரை இறுதியிலும்!) ஸ்ரீலங்கா வெற்றி பெற்றுள்ளதை என்னவென்று சொல்ல :( படு சுமாரான ஒரு அணி unfair-ஆக ஃபைனல்ஸுக்கு வந்திருப்பது உலகக்கோப்பையின் துர்பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும்!!!!

கடைசியில் கிடைத்த செய்தியின்படி, மொஹாலியில் மழை பெய்திருக்கிறது. அதனால், இந்தியா இரண்டாவது பேட்டிங் செய்து இலக்கைத் துரத்துவது சரியான தேர்வாக இருக்குமோ என்று ஒரு சின்ன சந்தேகம் எழுந்துள்ளது :) After all, India chased a good total successfully on a difficult pitch at Motera against the formidable Aussies!

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, March 26, 2011

இந்தியா vs ஆஸ்திரேலியா QF -வரலாற்றுச் சிறப்பு மிக்க கங்காரு வேட்டை

"செய் அல்லது செத்து மடி" என்ற வாசகத்துக்கு இணையாக அகமதாபாதின் Motera அரங்கம், போர்க்களமாக காட்சியளித்தது! ஆடுகளத்தின் ஒரு பக்கம் லேசான பசுமை தெரிந்தாலும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான, நின்று நிதானமாக ஆடவல்ல மட்டையாளர்களுக்கும் ஏற்ற, ஆடுகளம் என்று கூற பெரிய கிரிக்கெட் அறிவெல்லாம் தேவையில்லை.மற்றபடி, மைதானம் பச்சை பசேலென்று கண்ணுக்கு குளிர்ச்சி.

எதிர்பார்த்தது போல, டாஸில் வென்ற பாண்டிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தியா இரண்டாவதாக பேட் செய்யும்போது, ஆடுகளத்தில் பந்து மேலும் மெதுவாக மட்டையாளரை சென்றடையும் என்பதால், ஆஸ்திரேலியாவை 240 ரன்களுக்கு மேல் எடுக்காமல் பார்த்துக் கொள்வது முக்கியமானதாகப் பட்டது. அஷ்வின் முதல் ஓவரிலேயே பந்து வீச அழைக்கப்பட்டதால், Electrifying start எல்லாம் சாத்தியமில்லை என்ற நம்பிக்கையும் இருந்தது!

Both Ashwin and Zaheer bowled well within themselves, not giving many boundary scoring opportunities. சாகீரின் முதல் ஓவரிலேயே ஆடுகளத்தின் அபாயப் பகுதியில் ஓடியதற்காக, official எச்சரிக்கை தரப்பட்ட நிலையில் சாகீர் round the wicket-க்கு மாறி பந்து வீச வேண்டிய கட்டாயத்தை லேசான பின்னடைவு என்று தான் கூற வேண்டும். 10 வது ஓவரில், end மாற்றி, தோனி அஷ்வினை பந்து வீச வைத்ததில் (good captaincy) உடனடி பலன்! ஃபார்மில் இருந்த வாட்ஸன் அவுட்! This is a very important breakthrough! ரிக்கி பாண்டிங் களமிறங்கினார். பேட்டிங்கில் கவனம், நிதானத்துடன் பயமும் அப்பட்டமாகத்தெரிந்தது :)

முனாஃப் படேல் பந்து வீச்சில் ஒரு வித routine தன்மை வந்து விட்டது. அடுத்துஎன்ன மாதிரி பந்து வீசுவார் என்பதை எதிர்த்தாடும் மட்டையாளர்கள் கணித்து விடுகிறார்கள்! 14வது ஓவரில் ஹாடின் 3 பவுண்டரிகளை விளாசியதில், தோனி சுதாரித்துக் கொண்டு, அவரை நீக்கி விட்டார்! யுவராஜின் தங்கக்கரத்தால் ஹாடின் வீழ்ந்தார். ஸ்கோர் 110-2 (23 ஓவர்களில்). 30வது ஓவரை வீச சச்சின் அழைக்கப்பட்டது ஆச்சரியமாக இருந்தது! இது போன்ற ஒன்றை சதுரங்க ஆட்டத்தில் Novelty என்பார்கள் :) It was a good move by Dhoni to keep the batsmen in the middle, guessing.

அபாரமாகத் திரும்பிய ஒரு leg spinner-ஐ தவிர்த்து, சச்சின் ஓவரில் டிராமா எதுவும் இல்லை! ஆனால் அடுத்த யுவராஜ் ஓவரில் (சச்சின் ஏன் திடீரென்று பந்து வீச வர வேண்டும் என்று மூளை குழம்பிய நிலையிலிருந்த) கிளார்க், off-stump-க்கு வெளியே வீசப்பட்ட பந்தை கஷ்டப்பட்டு long-on பக்கம் வளைத்து தூக்கியடிக்க, சாகீர் கப்பென்று கேட்ச் பிடித்தார் :) ஸ்கோர் 141/3 (31 ஓவர்களில்). இந்திய அணியின் பந்து வீச்சும், முக்கியமாக ஃபீல்டிங்கும் முந்தைய ஆட்டங்களைக் காட்டிலும் சிறப்பாக இருந்தன. கோலி, ரெய்னா, யுவராஜ், அஷ்வின் ஃபீல்டிங்கில் பிரகாசித்தனர்!

For a change, India sensed blood :) இந்த சூழலில், ரிவர்ஸ் ஸ்விங்கை லேட்டாக கற்றுக் கொண்டாலும், லேட்டஸ்டாக விளங்கும் சாகீர் கானை தோனி பந்து வீச அழைத்தது, Smart Move! சாகீரின் (34வது) ஓவரில், மெதுவாக வீசப்பட்டு உள் வந்த பந்துக்கு பிஸி ஹஸ்ஸி தனது off-stump-ஐ பறி கொடுத்தார்! ஸ்கோர் 152/4 (RR 4.47). நடு ஓவர்களில் ஆஸ்திரேலிய பேட்டிங் தறிகெட்டு ஓடாததற்கு, 2 முக்கிய விக்கெட்டுகள்வீழ்ந்ததே காரணம் என்றால் அது மிகையில்லை.

ஒரு சில தினங்களில் நமது பந்து வீச்சு பிரமாதமானதாக மாறியது என்றில்லை, தோனியின் ஃபீல்டிங் அமைப்பும், பந்து வீச்சு மாற்றமும் கச்சிதமாக இருந்தது. Dhoni surprised me again :) விராத் கோலி பந்து வீச வந்தார். தோனியின் ஃபேவரட் ரெய்னா பந்து வீச அழைக்கப்படாதது சற்று ஆச்சரியமாக இருந்தது. 40 ஓவர்களில் ஸ்கோர் 185/4. மீண்டும் சச்சின்! அருமையாக பந்து வீசினார், 4 ரன்கள் மட்டுமே! முன்னர் நடந்தது (கிளார்க் விக்கெட்!) போலவே, சச்சின் ஓவருக்கு அடுத்த (சாகீர்) ஓவரில், விக்கெட்! ஒயிட் மென்மையாக சாகீருக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சச்சின் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று சொல்பவர்களை கட்டி வைத்து உதைக்க வேண்டும் ;)

ரிக்கி பாண்டிங் மெல்ல மெல்ல சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்ததைப் பார்த்து, பேட்டிங் பவர் பிளேயில் சாமியாடுவாரோ என்ற கவலை இருந்தது! ஆனால், it was David Hussey who played a neat little cameo (38 off 26) compensating for his brother's failure. 47வது ஓவரில் பாண்டிங் சதமடித்தார். அஷ்வின் மூளையை சரியாக பயன்படுத்தும்ஓர் எஞ்சினியர் என்பதை அவர் வீசிய 49வது ஓவர் நிரூபித்தது (4 ரன்கள் மட்டுமே)!

கடைசி ஓவரில் ஹர்பஜன் 13 ரன்கள் தாரை வார்த்ததில், ஆஸ்திரேலியாவின் மொத்த ஸ்கோர் 260/6. இந்தியா தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் ஆடினால், துரத்த வல்ல இலக்கு என்று தான் தோன்றியது. பற்றற்ற முனிபுங்கவர்களுக்கு நிகரான சிலர் போல, 'இந்தியா வெல்வதை விட நல்ல fight back தர வேண்டும்' என்ற வறட்டு சித்தாந்தமெல்லாம் என் "பொது" புத்திக்கு அப்பாற்பட்டது :) அது போல, ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வ வேண்டும் என்ற வெறியை விட, இந்தியா திறமையாக விளையாடி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற அவா அதிகமாக இருந்தது!

Second Innings: சச்சினும் சேவாகும் களமிறங்கினர். 100 கோடி+ மக்கள் இந்திய வெற்றிக்காக "அவரவர் தமதமது அறிவறி வகைவகை" விஷயங்களை செய்யத் தொடங்கினர்! முதல் ஓவரிலேயே ரென்ஷன், பாண்டிங் UDRS உதவி நாடியும், சேவாக் தப்பினார். சச்சினின் பேட்டிங்கில் இருந்த ஒரு வித purpose நம்பிக்கையைத் தந்தது. டைட்டின் பந்து வீச்சு சரியில்லாததால், ஜான்சன் அழைக்கப்பட்டார்.

9வது ஓவர் வரை அமைதி காத்த சேவாகால், அதற்கு மேல் "முடியல" :-) வாட்ஸனின் surprise பவுன்ஸருக்கு சேவாக் காலி, ஸ்கோர் 44-1. 11வது ஓவரில் சலசலப்பு, பாண்டிங் (கம்மனாட்டி) இவ்வளவு கிரிக்கெட் ஆடியும் திருந்தவே இல்லை என்பதை, கம்பீர் அடித்த பந்து தரையில் பட்டு அவர் கைகளில் விழுந்தும், அம்பயர்களிடம் அவர் செய்த அலம்பல் நிரூபித்தது!!!

ஜான்சனின் 12வது ஓவரில், சச்சின் அடித்த 2 பவுண்டரிகள் அற்புதமானவை.ஓன்று, முன்னேறி நடந்தபடி மிட்-விக்கெட் திசை நோக்கி செய்த Flick, மற்றொன்று, பாயிண்ட் திசையில் செய்த Steer! It was just pure timing from the little maestro! டைட் வீசிய 17வது ஓவரில், சச்சின் அரைச்சதம் பூர்த்தி, 61 பந்துகளில். டைட் கன்னாபின்னாவென்று பந்து வீசினாலும், ஹாடினின் விக்கெட் கீப்பிங் உலகத்தரமாக இருந்தது குறிப்பிட வேண்டியது. 19வது ஓவரில், டைட் வீசிய ஒரு unplayable பந்தில், ஹாடினுக்கு காட்ச் கொடுத்து சச்சின் விக்கெட் இழந்தார்! முடிவு மூன்றாவது அம்பயரின் ரெவ்யூவுக்கு சென்றதால், 'நோ பாலாக இருக்குமோ?' என்ற பலர் நப்பாசையில் மண்! 98/2, 19 ஓவர்களில்.

சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீச வந்த சமயமிது. Length சரியில்லாததால், இந்த ஆடுகளத்திலும், கிரைஃசாவின் பந்துவீச்சு பரிமளிக்கவில்லை! வார்ன் போன்ற ஒருவர் இருந்திருந்தால், ஒரு வழி பண்ணியிருப்பார் என்பது நிதர்சனம். கவனமாக ஆடிக் கொண்டிருந்த கோலி, ஒரு கேவலமான fulltoss-க்கு அவுட்டானது துரதிருஷ்டம். Enter Yuvaraj ! முதல் பந்திலேயே ஒரு பவுண்டரி வாயிலாக, he meant business என்று அறிவித்தார் :) இன்னொரு பக்கம், கம்பீர் நம்பிக்கைச் சின்னமாக 1,2 என்று ரன்களை சேர்த்து, ரன்ரேட் குறையாத வண்ணம் ஆடிக் கொண்டிருந்தார்.

33வது ஓவரில் கம்பீரின் அரைச்சதம். In the circumstances, this is a very special innings from Gautam. 34வது ஓவரில் ஒரு முறை தப்பிய கம்பீர், அடுத்த பந்தில் மீண்டும் "தலையிழந்த கோழி" போல ஓடி, அனாவசிய ரன் அவுட்! இதற்கு யுவராஜ் மேல் எந்த தவறும் கூற முடியாது. களமிறங்கிய தோனி ரொம்ப நேரம் தாக்கு பிடிக்காமல், லீ பந்தில், கிளார்க் பிடித்த ஒரு அபாரமான கேட்ச் வாயிலாக விக்கெட்டிழந்தார்.

38 ஓவர்களில் ஸ்கோர் 187/5. தேவையான ரன் ரேட் முதல் முறையாக ஆறைத் (6.2) தொட்டது! நான் சற்றே நம்பிக்கை இழந்த தருணம் இது தான்! ஆஸ்திரேலியர்களின் உடல்மொழி வேறு பயத்தை அளிப்பதாக இருந்தது! ரென்ஷனால் விளைந்த reflex செயலாக, வாய் ஸ்லோகங்களை உச்சரிக்கத் தொடங்கியது :) எனக்குப் பிடித்த ரெய்னா களமிறங்கினார்

பனி காரணமாக, பந்து வீச்சாளர்களுக்கு பந்தை grip செய்வது கடினமாக இருந்தது. ஆடுகளத்தில் புழுதி பறந்து கொண்டிருந்தது. Batting was becoming increasingly difficult. பவர் பிளே 45-46 ஓவர்களுக்குள் எடுத்து முடிந்திருக்க வேண்டும் என்று நானே பலமுறை எழுதியிருக்கிறேன். ஆனாலும், இந்தியா, BPP எடுக்காதது நல்லது என்று நான் கூறுவதற்கு 2 காரணங்கள்! 1. முந்தைய ஆட்டங்களின் அனுபவம் தந்த அச்சம் 2. தேவையான ரன்ரேட்டும் அத்தனை அதிகமில்லை. குஜராத்தின் "வெற்றி" நாயகர் நரேந்திர மோடி அரங்கில் இருந்ததால், மீண்டும் நம்பிக்கை துளிர்த்தது :)

40வது (லீ), 41வது (டைட்) ஓவர்களில் ஆட்டம் வேகமாக இந்தியா பக்கம் திரும்பியது :) மொத்தம் 27 ரன்கள்! ஸ்கோர் 220/5 (RRR 4.55). மிகுந்த அழுத்தமான சூழலில், உலகக் கோப்பையில் தனது 2வது ஆட்டத்தில் விளையாடும் ரெய்னாவின் ஆட்டத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை!!! Raina soaked all the pressure of a high voltage World cup match, displayed splendid maturity in a difficult situation and that immensely helped Yuvaraj to stay Cool & play solidly! தோனி தன் மீது வைத்திருக்கும் அசாத்திய நம்பிக்கை துளியும் குறையாத வகையில் (முந்தைய IPL-ல் ஆடியது போலவே) ரெய்னா பந்து வீச்சை அபாரமாக கையாண்டார்.

45வது ஓவரில் யுவராஜின் அரைச்சதம்! இந்திய பேட் செய்தபோது, ஆடுகளம் பேட்டிங்குக்கு இன்னும் கடினமான ஒன்றாக மாறி விட்ட சூழலில், பாண்டிங்கின் சதத்தை விட முறையே யுவராஜ், கம்பீர் மற்றும் சச்சினின் அரைச்சதங்கள் மதிப்பு மிக்கவை! 46வது லீ ஓவரின் முதல் பந்தில் ரெய்னா நேராக அடித்த சிக்ஸர் pure timing! 47வது ஜான்சன் ஓவரில் 11 ரன்கள், வெற்றிக்கு 3 ஓவர்களில் நான்கே ரன்கள் தேவை, பாண்டிங் முகத்தில் ஈயாடவில்லை, ஆனால் அவர் மேல் துளியும் பச்சாதாபம் ஏற்படவில்லை! Fittingly Yuvaraj scored the winning runs and a historic win knocked out the 3-time champion team!

பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த (அரை இறுதி) ஆட்டம், இதை விடக் கடினமாக இருக்கும் என்று மீடியாவில் கூக்குரல் கேட்டாலும், this match is easily the best game of the world cup so far, even better than the famous Irish win over England.

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails